“நாங்க மூழ்கிட்டோம்.. ஆனா உங்களையும் கொண்டுதான் போவோம்!” – வங்கதேசத்துக்கு ஆப்கான் எச்சரிக்கை

0

“எங்களின் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக மூத்த வீரர்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. ஆனால் அனைத்துப் தொடரின் போதும் நாங்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறோம்”

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தற்போது புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பில் தொடர்கிறது. இலங்கை அணி 5 வது இடத்திலும், வங்கதேசம் 6 -வது இடத்திலும் பாகிஸ்தான், மேற்கி இந்திய தீவுகள் அணி முறையே 7 மற்றும் 8 -வது இடங்களில் உள்ளன. இந்நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியும், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் வங்கதேசம் அணியும் இன்று சவுத்தாம்டன் மைதானத்தில் மோதுகிறது.

இந்தப் போட்டி இரு அணிக்கும் முக்கியமானது. இந்தப் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் முதல் வெற்றிக்காக இன்னமும் போராடும் நிலையில் உள்ளது அந்த அணி. வங்கதேசமோ, `நாங்கள் இங்கே சும்மா விளையாடிச் செல்ல வரவில்லை. எங்களுக்கும் கோப்பை தான் இலக்கு’ என்று சொன்னதோடில்லாமல் அதற்கு ஏற்றபடி விளையாடியும் வருகின்றனர்.

வங்கதேசம்
வங்கதேசம்

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டி தொடர்பாகப் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நைப், வங்கதேச அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய நைப், “இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் எங்களது ஆட்டத்தைப் பார்த்து இருப்பீர்கள். இந்தியா உலகின் சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட ஒரு அணி. ஆடுகளம் மட்டும் ஒத்துழைத்தால் நாங்கள் வங்கதேசம் மட்டுமல்ல அனைத்து அணிக்குமே நாங்கள் சிக்கலான அணியாகத் தான் இருப்போம்.

முதல் மூன்று நான்கு போட்டிகளில் நாங்கள் கடுமையாக திணறினோம். இங்கிருக்கும் ஆடுகளங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடைசியாக விளையாடிய இரண்டு ஆடுகளங்களும் சிறப்பானது. ஆசிய ஆடுகளங்கள் போன்று நன்றாகச் சுழல்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரையில் நாங்கள் மூழ்கிவிட்டோம் (தொடரில் இருந்து வெளியேறியதைச் சொல்கிறார்).. ஆனால் உங்களையும்(வங்கதேசம்) எடுத்துத் தான் செல்வோம்

ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப்

இந்தப் தொடரில் வங்கதேசம் தங்களது முழுத்திறமையும் காட்டி விளையாடி வருகிறது. 300 ப்ளஸ் ரன்களையும் சேஸ் செய்கிறார்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் ஸ்பின்னர்கள் உலக தரம் வாய்ந்தவர்கள். ஆடுகளம் மட்டும் சாதகமாக இருந்தால் வங்கதேசத்துக்குச் சிக்கல் தான். நடப்பு உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரையில் நாங்கள் மூழ்கிவிட்டோம்(தொடரில் இருந்து வெளியேறியதைச் சொல்கிறார்).. ஆனால் உங்களையும்(வங்கதேசம்) எடுத்துத் தான் செல்வோம்” என்றார் சிரிப்புடன்.

தொடர்ந்து பேசிய நைப், “எங்களின் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக மூத்த வீரர்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. ஆனால் அனைத்துப் தொடரின் போதும் நாங்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறோம். சின்ன சின்ன விஷயங்கள் குறித்தும் விவாதிக்கிறோம். எங்கே தவறு நடந்தது.. எதைச் சரி செய்ய வேண்டும் என்று எல்லாம் விவாதிக்கிறோம்” என்றார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப்
ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப்

ஆப்கானிஸ்தான் வங்கதேசம் மோதும் போட்டியானது இன்று மதிய 3 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.