மட்டக்களப்பில் பாரிய குண்டுகள் வெடிப்பு ! மாணவர்கள் பதற்றம்!

0

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டுகளைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் எந்தவித முன்னறிவித்தல்களும் வழங்கப்படாத நிலையில் இந்த நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடித்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை தோன்றியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளான உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் பெற்றோர் குவிந்துள்ளனர்.

இதன்போது அச்சத்துடன் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்றதன் காரணமாக இரண்டு பாடசாலைகளையும் இடையில் மூடவேண்டிய நிலையேற்பட்டதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி மேற்கொண்ட நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணம் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு வினவியுள்ளார். இதன்போது, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த குண்டை செயலிழக்கச் செய்யப்போவதாக விசேட அதிரடிப்படையினர் கோரியபோது, பாடசாலை நேரத்தில் செய்யவேண்டாம் என கூறிய நிலையிலும் அதனை மீறி விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.