மீண்டும் சொதப்பலாக ஆடி முடித்த இலங்கை!

0

மீண்டும் ஒரு மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக 232 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடனும், குசல் பெரேரா இரண்டு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 2.2 ஓவர்களுக்கு 3 ஓட்டங்களக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து மோசமான ஆரம்பத்தை பெற்றது.

மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்தக குசல் மெண்டீஸ் – அவிஸ்க பெர்னாண்டோ சற்று நேரம் இங்கிலாந்து அணியின் பந்துகளுக்கு தாக்குப்பிடித்தாட இலங்கை அணி 10.4 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஸ்க பெர்னாண்டோ 12.5 ஆவது ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 49 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

தொடர்ந்து மெத்தியூஸ் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவர  29.4 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஜீவன் மெண்டீஸும் எதிர்கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். 

இதனால் இலங்கை அணி 29.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டத்தை பெற்றது. 6 ஆவது விக்கெட்டுக்காக தனஞ்சய டிசில்வா களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 40.5 ஆவது ஓவரில் மெத்தியூஸ் மொத்தமாக 84 பந்துகளில் அரைசதம் பெற்றார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆடுகளத்தில் மெத்தியூஸ் 85 ஓட்டத்துடனும், நுவான் பிரதீப் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேப்ர ஆர்ச்சர், மார்க்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

photo credit : ICC

Leave A Reply

Your email address will not be published.