தலைவர் பிரபாகரன் படங்களை பேஸ்புக்கினால் தடை செய்ய முடியுமா?

0

நமது இணையதளத்தின் முகநூல் பக்கம் கடந்தவாரம் முகநூல் நிர்வாகத்தினால் முடக்கம் செய்யப்பட்டது. எந்தவிதமான பதிவுகளையும் இணைப்புகளையும் புகைப்படங்களையும் பிரசுரிக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாடு அல்லது சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தமைக்காகவே இவ்வாறு முகப்புத்தகம் முடக்கப்பட்டதாக முகப்புத்தக சட்டகங்கள் கூறியிருந்தன.

எமது முகநூலில் என்ன விடயங்கள் பகிரப்பட்டன? ஊடக அறம் சார்ந்த நெறிமுறையின் அடிப்படையிலேயே நாம் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். எமது இணையத்தைப் பொறுத்தவரையில் ஊடக அறம் என்ற விடயத்தில் ஒரு போதும் நாம் தவறியதில்லை.

தமிழீழ மக்களின் நீதிக்காகவும் தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் உரிமைக்காகவும் எமது இணையத்தளம் செய்திகளை வெளியிட்டு வருகின்றது. தனிப்பட்டவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர்களின் குரலை எமது ஊடகத்தில் வெளிக்கொண்டு வெளிக்கொணர்ந்து வந்துள்ளோம்.

எமது ஊடகப் பணிக்கு உலகெங்கிலும் இருந்து பல்வேறு மக்கள் ஆதரவினை வழங்கி வருகின்றார்கள். ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழக மக்கள் எனப் பலரும் ஈழம்நியூஸின் வாசகர்களாக காணப்படுகின்றனர்.

எமது இணையத்தளத்தை பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. உண்மையில் வாசகர்களும் நமது இணையதளத்தில் அத்தகைய செய்திகளையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தலைவர் பிரபாகரன் குறித்த பதிவுகள், அவரது சிந்தனைகள், தலைவர் பிரபாகரன் குறித்த தற்கால அரசியல் வாதிகளின் கருத்துக்கள், பார்வைகள் அல்லது தற்காலத்துக்கு தேவையான முக்கியமான விடயங்கள் என்பவற்றை எமது ஊடகம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவர் பிரபாகரன் தொடர்பில் கூடிய ஒரு பொய்யான கருத்தை வாசகர்கள் அறிந்திருக்க கூடும். அதாவது போதைப் பொருள் வியாபாரம் செய்து பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை நடத்தியதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு தரப்பட்டவர்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சிங்கள அரசியல் வாதியான பொன்சேகா மற்றும் தமிழ் தலைவர்கள் முன்வைத்த தகவல்களை இணையதளம் செய்திகளாக வெளியிட்டன.

உண்மையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஒருவர் தெரிவிக்கக்கூடிய தகவல்களையும் செய்திகளாக வெளியிடுவது ஊடகத்தின் சாதாரணமானதொரு பணி ஆகும். இதனையே எமது ஊடகம் மேற்கொண்டிருந்தது. இதன்போது தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தோம்.

இந்தநிலையில் எமது முகப்புத்தகம் முடக்கப்பட்டிருந்தது. தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை வெளியிட்டமைக்காகவே எமது முகப்புத்தகம் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தலைவர் பிரபாகரனுடைய புகைப்படத்தை சமூகத்துக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு புகைப்படமாக முகப்புத்தக நிறுவனம் அடையாளப்படுத்தி இருப்பதே இதற்கான சிக்கலாகும்.

உண்மையில் இந்த விடயம் ஒரு ஆபத்தான ஒரு விடயமாகும். தமிழ் மக்கள் ஏற்கனவே இலங்கை தீவில் இன அழிப்பே சந்தித்தவர்கள். இது போன்ற ஊடகங்களும் இத்தகைய இன அழிப்பையும் ஒடுக்குமுறையை மேற்கொள்வது, ஊடகத்துக்கும் சமூக வலைத்தளங்களின் தார்மீகத் தன்மைகளுக்கும் எதிரான ஒரு விடயமாகும். அடிப்படை உரிமை மீறலாகும்.

உண்மையில் மக்களின் அபிலாசைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் அவற்றுக்கு இடமளிக்கவேண்டும். தலைவர் பிரபாகரன் உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு உன்னதமான தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடி ஒருவர் என்றும் எல்லா மக்களும் தமிழக மக்களும் தலைவர் பிரபாகரன் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையை மதிக்க வேண்டியது பேஸ்புக்கின் சமூக வலைத்தளங்களின் அவசியமான ஒரு கடமையாகும். அதைவிடுத்து தலைவர் பிரபாகரனின் முகத்தை சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ஒருமுகமாக அடையாளப்படுத்துவது அதனை பகிர்வதன் மூலம் சமூக வலைத்தளத்தை சமூக வலைத்தள பக்கத்தை முடக்குவது என்பது கருத்துச் சுதந்திர மறுப்பு. அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் துணை போகின்ற கொடூரமான செயலாகும்.

எனவே இவ்வாறான அநீதிகள் தொடர்ந்தால் உலகத்தில் வாழக்கூடிய அனைத்து தமிழ் மக்களும் முகப்புத்தகத்தை நிராகரிக்க வேண்டி ஏற்படும். வேறு சமூக வலைத் தளங்களை நாடிச் செல்ல வேண்டி ஏற்படும். முகப்புத்தகத்தை புறக்கணித்து அதில் அதிலிருந்து விலகி வேறு சமூக வலைத்தளங்களை நாட வேண்டிய சூழல் வரும்.

எனவே முடியுமானவரை இந்த விடயத்தில் முகநூல் நிர்வாகத்துக்கும் எமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் தெரிவிப்போம். அனைவரும் இதனை எடுத்துரைத்து, தலைவர் பிரபாகரனுடைய புகைப்படத்தை சுதந்திரமாகவும் உரிமையோடும் பகிர்ந்து கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவோம்.

இது போன்ற ஆபத்துகளை தற்காலத்திலேயே இல்லாது செய்ய வேண்டும். அல்லது இதுவே நமது எதிர்கால இருப்புக்கும் வாழ்வுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும். சரித்திரங்களையும் வரலாறுகளையும் மறைக்கின்ற இது போன்ற பிற்போக்கு தனமான தவறான செயல்களை ஒழித்து கட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஆசிரியர்
ஈழம்நியூஸ்.
06.07.2019

Leave A Reply

Your email address will not be published.