தேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கிய சிங்கள அரசு!

0

ஈழத்தின் தலைநகர் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா தமிழ் மக்களின் பூர்வீகமான ஒரு பிரதேசமாகும். ஈழத் தீவு முழுவதும் இலங்கைத் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும் மற்றுமொரு முக்கியமான தொல்லியல் ஆதாரமாகும்.

சிங்கள அரசு வடக்கு கிழக்கின் பூர்வீக தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றையும் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சிங்கள அரசாலும் இராணுவத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலையில் பல பகுதிகளில் சிங்கள பௌத்த மயம் படுத்தப்பட்டுள்ளன.

கண் தளைத்த குளம் என்பதனால் கந்தளாய் என அழைக்கப்பட்ட தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதி இன வன்முறைகள் வாயிலாக கைப்பற்றப்பட்டு இன்று முழுமையாக சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று இப்போது கன்னியா பகுதியையும் ஆக்கிரமித்து அதனை பவுத்த சிங்கள மயப்படுத்த சிங்களப் பேரினவாதம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் கன்னியா வெந்நீரூற்று பகுதியை பாதுகாக்க வேண்டும் என கன்னியா மரபுரிமை அமைப்பு போராட்டம் ஒன்றுக்கு கடந்த 16ஆம் திகதி அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தில் வடக்கு கிழக்கை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அங்கே ஒன்று திரண்டு இருந்தனர்.

சிங்களவர்களைப் போல சிங்களப் பேரினவாதிகள் போல ஈழத்தமிழ் மக்கள் மதவாதிகள் இல்லை. அவர்கள் தமது மதத்தை பண்பாடாகவும் வழிபாட்டுக்குரிய உபாயமாகவே பயன்படுத்துகின்றனர். எனினும் ஒரு ஆலயம் சார்ந்த பிரச்சனைக்காக இவ்வாறு மக்கள் ஒன்கூடி போராட்டம் ஒன்றை நடத்தியமை இதுவே முதற்தடவையாகும். அதிலும் இளைஞர்கள் சுமார் 2000 பேர் அங்கு திரண்டு இருந்த சிங்களப் பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாதிகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிங்கள அரசானது தனது நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்திற்கு தடை விதித்தது. அத்துடன் போராட்டம் இடம்பெற இருந்த இடத்திற்கே சிங்கள ராணுவத்தையும் காவல்துறையை இறக்கி மக்களுக்கு எதிராக கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வடக்கிலிருந்து சென்றவர்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. 

சிங்கள அரசானது தனது நீதிமன்றத்தின் மூலமும் காவல்துறை மற்றும் இராணுவத்தின் மூலமும் எவ்வாறு தடைகளை ஏற்படுத்தியதோ அதே போன்று தனது சிங்களப் பேரினவாதிகள் வைத்தும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தடைகள் ஏற்படுத்தப்பட்டன. போராட்டம் இடம்பெற இருந்த இடத்திற்கு பிக்குகளும் சிங்களப் பேரினவாத காடையர்களும் திரண்டிருந்தனர்.

போராடும் மக்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மத குருக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் திருகோணமலை கன்னியா தென்கயிலை ஆதீனத்தின் முதல்வர் அகத்தியார் அடிகளாருக்கு சிங்களக் காடையன் ஒருவன் சுடுநீரால் ஊற்றி இருந்தமை பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஆகும்.

சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழ் மக்களையும் அவர்களின் வணக்கத்துக்குரிய மதத் தலைவர்களையும் அவர்கள் கடவுளர்களையும் எவ்வாறு தாக்குகிறார்கள், எவ்வாறு ஒடுக்குகிறார்கள் என்பதற்கு மதிப்பிற்குரிய அகத்தியர் மீதான இக் கொடூரச் செயல் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். மிக மிக அருவருப்பான இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. இதுதான் சிங்களத்தின் கொடூர முகம். 

முள்ளிவாய்க்காலில் எவ்வாறு சிங்கள அரசும் சிங்களப்படைகளும் கொத்துக்கொத்தாக ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்ததோ, அதே மனநிலையிலேயே இன்னும் இருப்பதையே கன்னியா வெந்நீரூற்று நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. ஏற்கனவே நாவற்குழியிலும் முல்லைத்தீவு செம்மலை நீராவியடியிலும் பௌத்த சிங்கள மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கன்னியா பகுதியையும் ஆக்கிரமிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கரங்களை ஆக்கிரமிப்பு கால்களை எமது அரசியல் தலைமைகள் தடுத்து நிறுத்துமா? இலங்கை அரசாங்கத்திற்கு எமது அரசியல் தலைமைகள் ஆதரவுகளை வழங்கி வருகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து சுட்டிக்காட்டி ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது எமது மக்களின் ஆதங்கமாகும்.

அவ்வாறான ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக கால அவகாசங்கள் பெற்றுக்கொடுத்து இந்த அரசாங்கத்தை பாதுகாப்பது பெரும் தவறான விடயமாகும். இதனை உணர்ந்து மதத் தலைவர்கள் இந்த அரசினை எதிர்த்து இதன் சிங்கள பௌத்த மயமாக்கல் பக்கங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்.இதனை முடிவுக்கு கொண்டு தமிழின இருப்பை பாதுகாக்க வேண்டும். 

உண்மையில் கன்னியா பகுதியில் சிங்களப் பேரினவாதிகள் ஏற்படுத்திய எச்சரிக்கையானது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கான எச்சரிக்கையாகும். இது ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்திற்கு எதிரான எச்சரிக்கையாகும். தேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கியுள்ளது சிங்கள அரசு. எனவே ஈழத் தமிழர்களுடைய தொல்லியல் பூர்வீக இடங்களை பாதுகாத்து எமது இருப்பை பாதுகாக்க ஒவ்வொரு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் ஒவ்வொரு பொது மக்களும் உணர்ந்து அர்த்தமுள்ள வகையில் செயலாற்ற வேண்டும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
21.07.2019

Leave A Reply

Your email address will not be published.