”அன்னைக்கு தப்பிக்க இருட்டுல 3 கி.மீ ஓடினேன். ஆனா, இன்னிக்கு?” – ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக் கதை

0

”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, ‘கல்யாணத்துக்குப் பிறகு கராத்தே கூடாதுன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுப்பா’ன்னு சொன்னேன்.”

Karate master Sangeetha

அன்று 

18 வருடங்களுக்கு முன், ரெட்ஹில்ஸை அடுத்த அலமாதி கிராமத்திலிருந்து, கல்லூரி மாணவி ஒருவர் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிப்பதற்காக தினமும் ரெட்ஹில்ஸில் இருக்கிற கோச்சிங் சென்டருக்கு, தன் டூவீலரில் சென்றுவருவார். காலேஜ் முடிந்து, கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து வீட்டுக்கு வருவதற்கு இரவு எட்டு, எட்டரையாகிவிடும். அன்றும் அப்படித்தான் வந்துகொண்டிருந்தார். திடீரென்று அவருடைய இரண்டு பக்கமும் இரண்டு வண்டிகளில் இரண்டு உதவாக்கரைகள் ஈவ் டீசிங் என்ற பெயரில், மாணவியின் வண்டியில் வேண்டுமென்றே மோதி, பக்கத்தில் இருந்த கால்வாயில் தள்ளிவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து, அந்த இருட்டுப் பாதையில் தன்னுடைய கிராமத்தை நோக்கி ஓடுகிறார், அந்த மாணவி.

Sangeetha
Sangeetha

இன்று

ஆஹ்.. ஊஹ்… ஆஹ்.. ஊஹ்… அதே மாணவி, 37 வயது நிரம்பிய லேடி கராத்தே மாஸ்டராகத் தன்னுடைய மாணவர்களுக்கு கராத்தே கலையைப் பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார். அவர் பெயர் சங்கீதா. 5 பிளாக் பெல்ட் வாங்கியவர். சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூரில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்ட சங்கீதாவின் மாணவர்கள், 14 தங்கம், 8 வெள்ளிப்பதக்கங்களை வென்று வந்திருக்கிறார்கள். பயந்து ஓடியது முதல் கராத்தே மாஸ்டர் வரை… எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம் என்று சங்கீதாவிடம் பேசினோம்.

”அன்னிக்கு ராத்திரி கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் கண்ணு மண்ணு தெரியாம ஓடினேன். ஊருக்குள்ள நான் ஓடி வர்றதைப் பார்த்துட்டு, எங்கப்பா பதறிப்போயிட்டாரு. அவர்கிட்டே அழுதுகிட்டே நடந்ததையெல்லாம் சொன்னேன். எங்கப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். அதனால, மத்த அப்பாங்க மாதிரி பயந்துபோய் என்னை வீட்டுல பொத்திவைக்காம, என்னை ஈவ் டீசிங் செஞ்சவங்க மேல போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்ததோடு, மறுநாளே எங்க ஊர்ல இருந்த கராத்தே கிளாஸில் கொண்டு போய் சேர்த்தார்.

ஒரு பொண்ணு வீட்டுக்கு; இன்னொரு பொண்ணு நாட்டுக்கு கோல்டு மெடல் அடிக்கட்டும்.

அன்னிக்கு நடந்த சம்பவத்தால பயந்துபோய்தான் நான் கராத்தே கிளாஸுக்கு போக ஆரம்பிச்சேன். ஆனா, போகப்போக எனக்கு அது மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சிடுச்சு. ஒரு தடவை எங்க கராத்தே கிளாஸ்ல இருந்து தெற்காசிய லெவல்ல ஒரு டோர்னமென்ட்டுக்கு கூட்டிட்டுப்போனாங்க. ஒரு அனுபவத்துக்காக இருக்கட்டும்னு நானும் அந்த டோர்னமென்ட்ல கலந்துக்கிட்டேன். ஆனா, அதுலேயே கராத்தேவோட செய்முறை விளக்கம் பண்ணிக்காட்டுற கட்டா, ஃபைட் பண்ற குமுத்தே ரெண்டுத்துலேயும் கோல்டு மெடல் வாங்கினேன்.

அப்பா பயங்கர ஹேப்பியாயிட்டாரு. ஒரு பொண்ணு வீட்டுக்கு; இன்னொரு பொண்ணு நாட்டுக்கு கோல்டு மெடல் அடிக்கட்டும்னு சொல்லி, பாதுகாப்புக்காக கத்துக்க ஆரம்பிச்ச கலையையே என் வாழ்க்கையாக்கிட்டாரு. நானும் சந்தோஷமா ஆஹ், ஊஹ் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்” என்று சிரித்தவரிடம், உங்கள் அம்மாவின் ரியாக்‌ஷன் எப்படியிருந்தது என்றோம்.

Sangeetha with her medals and awards
Sangeetha with her medals and awards

”பயங்கர பாசிட்டிவ் ரியாக்‌ஷன். ஏன்னா, அம்மா அந்தக் காலத்துலேயே பத்தாவதுல 450 மார்க் வாங்கினவங்க. செம போல்டு. ‘என் மார்க்குக்கு மெரிட்ல டீச்சர் டிரெய்னிங் சீட் கிடைச்சிருக்கும். எங்கப்பா படிக்கவிடாம கல்யாணம் பண்ணி வைச்சிட்டாரு. நீங்களாவது ஏதாவது சாதிக்கணும்’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஸோ, அவங்களும் என்கரேஜ்தான் செஞ்சாங்க” என்றவர், திருமணத்துக்குப் பிறகான தன் கராத்தே பயணத்தைப் பற்றி உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்.

”அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார். ‘கல்யாணத்துக்கு அப்புறம் கராத்தேவை தொடர விரும்புறியாம்மா’ன்னு கேட்டார். ‘கண்டிப்பா தொடரணும்பா. இப்ப நான் நேஷனல் செலக்‌ஷன்ல இருக்கேன். இன்னும் இன்டர்நேஷனல் லெவலுக்கு போகணும். வர்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, கல்யாணத்துக்கப் பிறகு கராத்தே கூடாதுன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுப்பா’ன்னு சொன்னேன்.

With Husband and kid
With Husband and kid

அப்பா கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, ‘நீ யாரையாவது விரும்பறியாம்மா’ன்னு கேட்டாரு. அப்ப, என் மனசுல உடனே என்னோட கோச் ராஜா சார்தான் வந்தாரு. நான் டோர்னமென்ட்டுக்காக வெளியூர்போறப்போ, என்னை அவ்வளவு பத்திரமா பார்த்துப்பாரு. அன்னிக்கும், இதே வார்த்தையைத்தான் அப்பாகிட்டே சொன்னேன். உடனே சம்மதிச்சட்டாரு. ஆனா, அதுக்கப்புறம்தான் பிரச்னையே ஆரம்பிச்சது.

அவரு வேற சாதி; நாங்க வேற சாதி. சொந்தக்காரங்க, ஊர், உலகம்னு மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு நிறைய யோசிச்சாரு அப்பா. ஆனா, எங்க மாஸ்டர் மேலே அவருக்கும் ரொம்ப மரியாதை இருந்துச்சு. நானும் அப்பாவோட சம்மதத்துக்காக பொறுமையா காத்துக்கிட்டிருந்தேன். அந்த நாளும் வந்துச்சு. ஒரு நாள், ‘இன்னிக்கு நாள் ரொம்ப நல்லாருக்கும்மா; நீ உன் மனசுக்குப் பிடிச்சவர் வீட்டுக்கு கிளம்பு’ன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாரு. என் கணவர் வீட்லதான் கல்யாண ஏற்பாடுகள் செஞ்சாங்க. கல்யாணமும் நல்லபடியா நடந்துச்சு. இப்ப எல்லாமே சரியாடுச்சு. பொறந்த வீடு; புகுந்த வீடுன்னு எல்லாருமே சந்தோஷமா இருக்கோம்.

சிசேரியன்ல பாப்பா பொறந்த நாலாவது மாசத்துல இருந்தே என் கணவர் எனக்கு டிரெய்னிங் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு.”

சங்கீதா

கல்யாணம் முடிஞ்ச மூணாவது மாசத்துல இருந்தே மேட்சுக்கு போக ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் பாப்பா பொறந்தா. சிசேரியன்தான். ஆனா, நாலாவது மாசத்துல இருந்தே என் கணவர் எனக்கு டிரெய்னிங் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அதோட பலனா, இலங்கையில் சர்வதேச லெவலில் நடந்த டோர்னமென்ட்டில் தங்க மெடல் வாங்கினேன்” என்கிற சங்கீதா, இதுவரைக்கும் தேசிய அளவில் 18 தங்கப்பதக்கங்களும் உலக அளவில் 7 தங்கப்பதக்கங்களும் வென்றிருக்கிறார்.

‘நம்ம நாட்டைப் பொறுத்தவரை ஜெயிச்சிட்டு வந்தப்புறம்தான் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். அதுக்கு முன்னாடி கிடைக்காது. அதனால, என்கிட்ட கராத்தே கத்துக்கிற ஏழைக் குழந்தைங்களுக்கு, அரசு பள்ளிக்கூட மாணவிகளுக்கு இலவசமா கத்துத்தர்றேன்; டோர்னமென்ட்ஸ் போறப்போ, என் சம்பளத்துல இருந்து மிச்சம் பிடிச்ச காசைப் போட்டும் கூட்டிட்டுப் போவேன்.

with Championship
with Championship

ஒலிம்பிக்ல இதுவரைக்கும் கராத்தே போட்டிக்கான இடம் கொடுக்கப்படலை. 2020-ல இருந்துதான் கராத்தேவுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கப்போகுது. தகுதி வாய்ப்புல உலகளவுல முதல் 100 இடங்கள்ல இருக்கிற நாடுகள் மட்டும்தான் அதுல கலந்துக்க முடியும். ஆனா, இந்தியா இந்த 100 இடங்களுக்குள்ள இல்ல. அதனால, 2025-ல் நடக்கப்போற ஒலிம்பிக்கில்தான் இந்தியா கலந்துக்கப்போகுது. அதுல கலந்துக்கிட்டு தங்க மெடல் வாங்கணும்கிறதுதான் என்னோட லட்சியம்” என்கிற சங்கீதாவின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை.

Leave A Reply

Your email address will not be published.