கோத்தாபய ஒரு பலவீனமான வேட்பாளர் – ஜே.வி.பி. கருத்து!

0

ராஜபக்ஷ கூட்டணியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மிகவும் பலவீனமான வேட்பாளரே கோத்தாபய ராஜபக்ஷவெனவும் தந்தை- மகன், அண்ணன் -தம்பி அரசியலை செய்யவே பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது.

இம்முறை தாம் களமிறக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைக்கும் வாக்குகளை வேறு எந்த கட்சியுடனும் பங்கிட்டுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த சில தாசப்தகாலமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சிகண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைவிட்ட காலத்தில் இந்த நாட்டின் கடன்தொகை 10 இலட்சத்து 50ஆயிடம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்த கடன்தொகையை இல்லாது செய்து நாட்டினை அபிவிருத்தி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் ஆட்சியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் கடன் தொகையை 12 இலட்சம் கோடியாக உயர்த்தி வைத்துள்ளனர்.

எமது நாட்டின் இருப்பு 1 இலட்சம் கோடியாகும். ஆனால் எமது நாட்டின் கடன் 12 இலட்சம் கோடியாக உள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் மீண்டும் குடும்ப ஆட்சியையும் குழப்பகர ஆட்சியையும் உருவாக்க பிரதான இரண்டு கட்சிகளும் முயற்சித்து வருகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள இந்த நிலையில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், பாதாள கோஷ்டிகளின் ஆதிக்கம், பயங்கரவாதம் என பல வழிகளிலும் நாடு நாசமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இன்று நாடே நாசமாக்கப்பட்டுள்ளது. இனவாத முரண்பாடுகள் தலைதூக்கி மக்கள் இடையில் அமைதியின்மையும், ஒற்றுமையினையும் மட்டுமே காணப்படுகின்றது.

நாட்டினை ஆட்சிசெய்யும் தலைமைகள் எந்த விதத்திலும் குற்றச்சாட்டுகளில் இல்லாத, வழக்குகள் இல்லாத தூய்மையான நபர்களாக இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களினதும், மத தலைவர்களினதும் கோரிக்கையாகும். அவ்வாறான தலைமைத்துவம் இன்று பிரதான இரண்டு கட்சிகளில் உள்ளதா என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.