“தாக்குதலுக்கும் பசுமை விகடனுக்கும் சம்பந்தம் இல்லை!” – கொள்ளையர்களை விரட்டிய தம்பதி

0

அமிதாப் பச்சன், தன்னுடைய ட்விட்டரில் ‘ப்ராவோ’ என்று இந்தத் தம்பதியை வியந்து பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் சண்முகவேலுவுடன் செந்தாமரை ( எல்.ராஜேந்திரன் )

திருநெல்வேலியில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வயதான விவசாய தம்பதிகளிடம் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி அடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

கொள்ளையர்களை விரட்டியடித்து இந்திய அளவில் பிரபலமாகி இருக்கிறார்கள் இந்த விவசாயத் தம்பதி. நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய ட்விட்டரில் `ப்ராவோ’ என்று இந்தத் தம்பதியினரை வியந்து பாராட்டியிருக்கிறார், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் `திருட்டுப் பசங்க எல்லோருக்கும் இந்த வீடியோவைப் பார்த்தா அல்லுவிடும். என்ன வீரம்’ என்று பாராட்டியுள்ளார். நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவிலும் தமிழக முதல்வர் பாராட்டு தெரிவிக்க இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னோடி இயற்கை விவசாயி சண்முகவேலு. அவர் மனைவி செந்தாமரை. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகன் பெங்களூருவிலும் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர். மகள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.

சண்முகவேலு செந்தாமரை தம்பதி
சண்முகவேலு செந்தாமரை தம்பதி

தற்போது 70 வயதாகும் சண்முகவேலு, தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் மனைவி செந்தாமரைக்கு 65 வயதாகிறது. மகன்களும் மகளும் வெளியூரில் இருப்பதால், இருவரும் அதே கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அந்த நிலத்திலேயே வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். அந்த நிலத்தில் இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இரவு, தங்களைத் தாக்க வந்த கொள்ளையர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விவசாயி சண்முகவேலுவிடம் பேசினோம். “நான் ஓய்வு பெற்ற பிறகு கடந்த 10 வருஷங்களா இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். நான் ஒவ்வொரு வருஷமும் எலுமிச்சைச் சாகுபடியில அதிக மகசூல் எடுத்துட்டு வர்றேன். அதைப்பத்தி தற்போதைய பசுமை விகடன் இதழ்ல என் பேட்டி வெளியாகி இருந்தது. அதில் என் செல்போன் நம்பரை போட்டிருந்தாங்க. அதனால, நிறைய விவசாயிகள் என்னைத் தொடர்பு கொண்டு எலுமிச்சைச் சாகுபடி சம்பந்தமா சந்தேகம் கேட்டுட்டு இருந்தாங்க. அதுக்கு நான் பதில் சொல்லிட்டு இருந்தேன். இந்த நிலையில்தான் இப்படியொரு சம்பவம் நடந்திடுச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, வழக்கம்போல போனில் பேசிவிட்டு வைக்கும்போது, எனக்குப் பின்னால, மறைந்திருந்த முகமூடிக் கொள்ளையன் கழுத்துல துண்டைப் போட்டு இறுக்கினான்.

கொள்ளை நடைபெற்ற வீடு
கொள்ளை நடைபெற்ற வீடு

நான் அய்யோனு கதற ஆரம்பித்தேன்” என்றவரைத் தொடர்ந்து பேசிய அவருடைய மனைவி செந்தாமரை, வீட்டுக்குள்ளிருந்த நான் திடீரென என் வீட்டுக்காரர் ஓலமிடும் சத்தம் கேட்டதும் பயந்துபோய் வெளியே ஓடி வந்தேன். அங்கே என் வீட்டுக்காரர் கீழே விழுந்து கிடந்தாரு. என் குலையே நடுங்கிப் போச்சு. கையில அரிவாளோடு ரெண்டு பேர் நின்னுட்டு இருந்தாங்க. இதைப் பார்த்ததும் கையில கிடைச்ச பொருள்களையெல்லாம் எடுத்து கொள்ளையனுங்க மேல வீசினேன். வீட்டுக்கு வெளியே கிடந்த செருப்பை வீசினேன். அது கொள்ளையனோட கண்மீது விழுந்தது. பிறகு அங்க கிடந்த வாளியை எடுத்து வீசினேன். கொள்ளையன் தப்பிக்க நினைச்சு அரிவாளைத் தூக்கியபடியே என்னை நோக்கி ஓடிவந்தான். உடனே கீழே கிடந்த ஸ்டூலை எடுத்து அவனுங்க முகத்த மேல வீசினேன். பிளாஸ்டிக் சேரை எடுத்துத் தாக்கினேன். என் கணவரும் சுதாரிச்சு எழுந்து, அவனுங்கள தாக்க ஆரம்பிச்சாரு. அரிவாளோடு நெருங்கி வந்த கொள்ளையன், என் கழுத்துல இருந்த 32 கிராம் நகையை அறுத்தான். அதைத் தடுத்தபோது என் கையில் வெட்டு விழுந்தது. நான் அதையும் கவனிக்காமல், அவனுங்கள விரட்டுறதிலேயே குறியாக இருந்தேன். நாங்க எதிர்த் தாக்குதல் நடத்துறதைச் சமாளிக்க முடியாத கொள்ளையனுங்க, விட்டால் போதும்னு தப்பி ஓடிட்டாங்க.

என் வீட்டுக்காரரு ஓய்வுபெற்றபிறகு, இந்தப் பகுதியில நிலம் வாங்கி 20 வருஷமா விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். செடிகளுக்கு உரம் வைக்கிறது, களை எடுக்கிறது, காய்களைப் பறிக்கிறதுனு எல்லா வேலைகளையும் நானும் என் வீட்டுக்காருமே செஞ்சிட்டு வர்றோம். தினமும் தோட்டத்துல வேலை செய்றதலா உடலும் மனமும் உறுதியாக இருக்குது. அதனாலதான் கொள்ளையனுங்கள விரட்டி அடிக்க முடிஞ்சது” என்றார்.

கணவர் சண்முகவேலுவுடன் செந்தாமரை
கணவர் சண்முகவேலுவுடன் செந்தாமரை

தொடர்ந்து பேசிய சண்முக வேலு, “என் வீட்டுல கொள்ளைச் சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல. ரெண்டு வருசத்துக்கு முன்ன, கோயிலுக்குப் போயிருந்தபோது வீட்டோட பின்பக்க கதவை உடைச்சு கொள்ளை முயற்சி நடந்தது. அதன்பிறகுதான் வீட்டைச் சுத்தி 14 சி.சி.டி.வி கேமராக்கள அமைச்சோம். கேமராக்கள் வைச்ச 6 மாசங்களுக்குப் பிறகு மோட்டார் ரூமில் பதுங்கியிருந்த 2 பேர் கொள்ளையடிக்க வந்தாங்க. தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருந்த ஆட்கள் விட்டியடிச்சுதுல தப்பி ஓடிட்டாங்க. மூன்றாவது முறையாகத்தான் இது நடந்துள்ளது. இந்த திருட்டுக்கும் அட்டைப்பட கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை” என்று அந்த விவசாயி சொல்லியிருக்கிறார். கொள்ளையனுங்க நிச்சயமா உள்ளூரோ பக்கத்து ஊராகத்தான் இருக்க வேண்டும். என் வீடு, தோட்டம் பத்தி முழுமையாகத் தெரியாமல் யாரும் நுழைந்திருக்க வாய்ப்பில்லை.

எங்களைப் போல தனியாக உள்ள தோட்ட வீடுகள்ல வீட்டைச் சுத்தி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கிறது ரொம்ப நல்லது. எங்க வீட்டைச் சுத்தி கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததனால்தான், அதிலுள்ள காட்சிகளை வெச்சு கொள்ளையர்களை அடையாளம் காண உதவியாக இருக்கு. முகத்தை அடையாளம் காண முடியாவிட்டாலும், உடலமைப்புகளை எளிதா அடையாளம் காண முடியுது. வாய்ப்பிருப்பவர்கள் வீட்டுக்குக் காவலாளிகளை நியமிச்சுக்குறது நல்லது. இந்தச் சம்பவம் எல்லோருக்கும் பாடம்” என்றார்.

இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை… இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வந்து விசாரணை நடத்தியுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி-யான அருண் சக்திகுமார் நேரில் வந்து விசாரித்துள்ளார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.