சவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன் சமிக்ஞையா?

0

ஸ்ரீலங்காவின் புதிய ராணுவ தளபதியாக ஈழத் தமிழினப் படுகொலையாளி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அவருக்கு அளித்திருப்பதன் மூலம் உள்ள தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கு முக்கியமான செய்தி ஒன்றை எடுத்துரைக்கின்றார்.

சவேந்திர சில்வா ஓர் இனப்படுகொலையாளி. இறுதிப்போரில் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் இழைத்தவர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து படுகொலை செய்த நிகழ்வின் சூத்திரதாரியாக சவேந்திர சில்வா கருதப்படுகின்றார்.

ஈழ இனப் படுகொலையில் பாலச்சந்திரன் படுகொலை மிகவும் முக்கியமான ஒரு படுகொலையாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றது. இலங்கை அரசு மிகவும் மோசமான முறையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளமைது. அதில் முக்கியமான ஆதாரமாக பாலச்சந்திரன் படுகொலையானது, ஐநாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் பாலச்சந்திரன் படுகொலை, போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டமை, பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சவேந்திர சில்வா சிறிலங்காவின் பிரதான தலைவராக நியமிக்கப்பட்ட போதும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை பாரியதொரு தவறான செயல் என்று கூறியுள்ளார். மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அமெரிக்கா இந்த நியமனத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சவேந்திர சில்வாவை இப்பதவியில் அதிபர் சிறிசேன நியமிக்கக் கூடாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த நியமனம் பற்றி கூறுகின்ற போது போர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு உயர் பதவி வழங்குவது தமிழர்களை நோகடிக்கும் என்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் ஒரு செயற்பாடாகும் என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை வாயில் இரத்தம் வழிகின்ற சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்து இருப்பது, மிகவும் அநீதியான ஒரு செயற்பாடு என்று யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கருத்தினை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவர் மீதான எதிர்ப்புக்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் இந்த எதிர்ப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சவேந்திர சில்வா, எந்த குற்றச்சாட்டுகளையும் தான் எதிர்கொள்ள தயார் என்றும் நாட்டுக்காக தொடர்ந்து இராணுவத் தளபதியாக பல்வேறு பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அத்துடன் போர்க் குற்றச்சாட்டுக்களை இயற்கை நீதியுடன் இணைத்து பாருங்கள் என்று சர்ச்சையான ஒரு கருத்தை கூறியிருப்பதன் மூலம் போர்க்குற்றச்சாட்டுகள் அதாவது இனப்படுகொலையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை சவேந்திர சில்வாவை ராணுவ தளபதியாக நியமிப்பது தனது இறைமை என்றும் அது இலங்கையின் இறைமை என்றும் சர்வதேச நாடுகள் தலையிடக்கூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இவருக்கு சார்பாக இவரது கருத்தினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சவேந்திர சில்வாவின் விடயத்தில் வெளி நாடுகள் தலையிடக்கூடாது என்ற எச்சரிக்கையை மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்து இருப்பதன் மூலம் தொடர்ந்து இலங்கை நாட்டில் ராணுவ ரீதியான இன அழிப்பும் இனப்படுகொலைகளும் தொடரும் என்கின்ற சமிக்கி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.

போர் முடிவடைந்து 10 ஆண்டுகளாக இந்த நிலையில் மிகவும் கொடூரமான போர் குற்றங்களில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவை நியமிக்க இருப்பதன் மூலம் தமிழர்களை ஒடுக்குகின்ற தனது நோக்கத்தை மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் – ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பு எச்சரிக்கையை, ஈழத் தமிழர்கள் புரிந்து கொண்டு அதற்கான எதிர்வினைகளையும் செயற்பாடுகளையும் ஆற்ற வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 25.08.2019

Leave A Reply

Your email address will not be published.