மக்களின் பணம் அரசியல்வாதிகள் வீடுகளிலேயே உள்ளது: பலத்தை தாருங்கள் நாங்கள் மீட்கிறோம் – அநுர

0

நாட்டினது பணம் வேறு எங்கும் இல்லை எனவும் அது நமது நாட்டு அரசியல்வாதிகள் சிலரின் வீடுகளிலேயே இருக்கின்றது எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை எதிர்காலத்தில் கட்டியெழுப்பக் கூடிய பணம் இங்கேயே உள்ளது எனவும் வெளிநாட்டு கடன்களையும் அடைத்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய வசதியும் உள்ளது அவர் குறிப்பிட்டார்.

மேலும் 72 வருடங்களாக விணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டியெழுப்ப ஆட்சிப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஹற்றனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இதுவரை காலமும் இந்த நாட்டின் மக்களுடைய பொது சொத்துகளையும் சூறையாடி வாழ்ந்த  அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி இட்டு தமது உழைப்புக்கு அப்பால் மேலதிகமான சொத்துகளை வைத்திருப்பவர்களிடமிருந்து அவைகளை மீட்டு அதனை மக்கள் சொத்தாக மாற்றி புதிய ஆட்சியை ஏற்படுத்துவோம்.

குடும்ப ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காதும் ஊழல் நிறைந்த ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காதும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதில் மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மக்கள் யாருக்கும் மொழி வேறுபாடு காட்டுவதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அவரவர்களின் உரிமைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் சிலர் அமைச்சரவைகளில் ஒன்றாக இருந்து கொண்டாலும், அவர்களின் அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையில் வேறுபாடுகளை உருவாக்குகின்றனர்.

இவ்வாறானவர்களால் இனங்களுக்கிடையிலும், மதங்களுடையிலும் குழப்பங்கள் ஏற்படுத்தி பொது மக்கள் கல்லெறிந்து கொள்கின்றனர்.

நாம் ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல்வாதிகளை காலி முகத்திடலுக்கு அழைத்து சென்று இன மத வேறுபாடுகளுக்காக அவர்களை கல்லெறிய செய்ய வைப்போம்.

நாட்டின் வளங்களை சூறையாடும் சக்திகளுக்கு நாம் இடங்கொடுக்கப் போவதில்லை. அண்மையில் தாமரை மொட்டு மலர்ந்தது. அங்கு 200 கோடி ரூபாய் ஊழல் ஏற்பட்டதாக ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். அந்த ஊழல் ஏற்படாமல் இருந்திருந்தால் நுவரெலியாவில் 200 பாடசாலைகள் கட்டியமைத்திருக்கலாம்.

அமைச்சர் பதவிகளையும், தொழிற்சங்க தலைவர் பதவிகளையும் வைத்துக் கொண்டுள்ள சிலர் சாதாரண மக்களின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகின்றது.

உரிமைகள் மறுக்கப்பட்டு அடுக்கி ஒடுக்கி வாழும் இந்த நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு கடன்கள் அல்லாமல் உழைப்பின் சக்தியின் ஊடாக புதிய ஒரு நாட்டை கட்டியெழுப்ப எம்மோடு கைகோர்த்து செல்லுங்கள் என அழைப்பு விடுவதுடன் தலைகுனிந்து கும்பிடு போடும் கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு சகல அரச அதிகாரிகளும் மக்களும் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.