வடக்கு தமிழர்களுக்கு மகாநாயக்க தேரர்கள் இறுதி எச்சரிக்கை!

0

வடக்கு தமிழ் மக்கள் பௌத்த சிங்கள மக்களின் கோப உணர்ச்சியைத் தூண்டினால் நாட்டின் நிலைமை கலவரமாகவே மாறிவிடும் என்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்திய அவர், ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலையிலான பௌத்த பிக்குகள், தலைமை விகாரையின் பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டதோடு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் நீதிமன்ற தடையுத்தரவை மீறிச் செயற்படும் பிக்குமார்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தவறினர்.

பிக்குமார்களின் இந்த செயற்பாட்டைக் கண்டித்து முல்லைத்தீவு மற்றும் தாயகப் பகுதிகளில் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நேற்றைய தினம் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்று வியாழக்கிழமை காலை மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டதோடு, பிக்குமார்கள் எந்த தவறையும் இழைக்கவில்லை என்று அடித்துக்கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.