ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் ஏவுகணை சோதனை – மிரட்டும் வடகொரியா!

0

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரிய படைகள் கடந்த ஆகஸ்டு கொரிய தீபகற்பத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் வகையில் தொடர்ச்சியாக குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது. மேலும் அணுஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

எனினும் வடகொரியாவுடனான நட்புறவு சிறப்பாக இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுவேன் என்றும் டிரம்ப் கூறினார்.

அதே போல் பேச்சுவார்த்தைக்காக வடகொரியா வருமாறு டிரம்புக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்தார். ஆனால் உடனடியாக வடகொரியா செல்ல விரும்பவில்லை, அதற்கான காலம் வரும்போது அது நடக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அணு ஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கவேண்டுமென வடகொரியா வலியுறுத்தியது.

இந்த நிலையில் அணுஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை வருகிற 5-ந்தேதி தொடங்கும் என வடகொரியா நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்ததது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரத்துக்குள் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்தது. இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான வான்சன் நகரில் இருந்து நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.17 மணிக்கு முதல் ஏவுகணையும், 7.27 மணிக்கு 2-வது ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 ஏவுகணைகளும் 910 கி.மீ உயரத்துக்கு மேல் சென்று, 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் நீர்பரப்பில் ஏவுகணைகள் விழுந்ததை ஜப்பானும் உறுதி செய்துள்ளது.

வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இந்த ஏவுகணை பரிசோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறிய செயல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கூறினார்.

அதே போல் தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘வடகொரியா மேற்கொள்ளும் இதுபோன்ற ஏவுகணை சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். எனவே வடகொரியா ஏவுகணை சோதனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடகொரியா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, மற்றொருபுறம் ஏவுகணைகள் சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.