தமிழீழத்தை தமிழிஸ்தான் என அழைக்கும் குர்திஸ்தானியர்கள்: தீபச்செல்வன்

0

2009இல் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்தனர். ஈழ இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு பத்தாண்டுகள் ஆகின்ற இன்றைய சூழலிலும் உலகில் போர் நடந்து கொண்டிருக்கின்றது. தனி நாட்டிற்காக போராடும் குர்திஸ்தானிய மக்களுக்கு எதிராக துருக்கி போரினை முன்னெடுத்து வருகின்றது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் குர்திஸ்தானிய இயக்கத்தின் ஆதரவை பெற்று, குர்திஸ்தானியப் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா தனது குர்திஸ் ஆதரவு  படைகளை விலக்கியதையடுத்தே துருக்கி போர் தொடுத்தது.

இப்போரினால் ஆயிரக்கணக்கான குர்திஸ்தானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்களோ, வேறுபாடற்ற நிலையில் எல்லையில் குவிந்து துருக்கிக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நடக்கும் குண்டுத் தாக்குதல்களும் தாக்குதல்களுக்கு அஞ்சி ஓடும் மக்களும் பற்றி எரியும் தீயும் மூளும் புகையும் ஈழத்தைதான் நினைவுபடுத்துகின்றன. உலகின் எந்த பகுதியிலும் போர் நடக்கக் கூடாது என்பதே ஈழத்து மக்களின் ஏக்கம். குர்திஸ்தானியப் போராளிகள் தமது போர்க்களத்திலும் சர்வதேச நாடுகளில் நடந்த போராட்டங்களிலும் ஈழக் கொடியை ஏந்தியிருந்தனர்.

குர்திஸ்தானியப் பெண் கொரில்லாப் போராளிகளைப் பார்க்கின்ற போது ஈழப் பெண் போராளிகள்தான் நினைவுக்கு வருகின்றனர். குர்திஸ் போராளிகள் இன்று எதிர்கொள்ளும் இன அழிப்பு போர், அவர்களின் போராட்டம் குறித்து நாம் சிந்திக்கவும் ஆதரவு அளிக்கவும் வேண்டிய நமது கடமையை அவசியப்படுத்துகின்றது.

1978ஆம் ஆண்டில் குர்திஸ் மக்களால் குர்திஸ்தான் என்ற தனிநாடு கோரிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதே காலப் பகுதியில்தான், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையை எதிர்த்து தனித் தமிழீழத்திற்கான போராட்டம் இலங்கைத் தீவில் ஏற்பட்டது. குர்திஸ் தொழிட்கட்சியின் தலைவராக அப்துல்லாஷ் ஒசாலன் அம் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்தார். தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் போலவே   குர்திஸ் மக்களும் மூன்று தசாப்பதங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பேச்சுவார்த்தைகளிலும் பங்கெடுத்தனர். எம்மைப்போலவே சர்வதேச அரசியல்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

தொழிட்கட்சியின் தலைவர் அப்துல்லாஷ் ஒசாலன் துருக்கி அரசால் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது  கைது அந்த மக்களின் போராட்டத்தை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. குர்திஸ்தமான் மக்கள் பல ஆண்டுகளாக தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இதன் அடிப்படையில் 1970இல் ஈராக் அரசிற்கும் குர்திஸ் எதிர்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து குர்திஸ்தான் தனிப் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. இதற்குப் பின்னரும்கூட குர்திஸ் மக்கள் தமது தனிநாட்டுக்கான போராட்டத்தை கைவிடவில்லை.

இதன் பின்னர், 1978இலேயே தொழிற்கட்சி உதயமாகியது. குர்திஸ் போராட்டம் உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கு தன்னம்பிக்கை தரும் போராட்டம். ஏனெனில் வெற்றி தோல்விகளைக் கண்டு ஐம்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம். ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக அறுபது வருடங்களுக்கு மேலாக  போராடி வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை தவிர்த்து, எவராலும் தனி நாட்டுப் போராட்டத்தை விட்டுக் கொடுப்பின்றி முன்னெடுக்க முடியாதிருந்தது. விடுதலைப் புலிகளின் உறுதியான இலட்சியத்தை குர்திஸ் போராளிகள் மெச்சுவதுண்டு.

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னான உலக அரசியல் சூழலில், தம்மை விடுதலைப் போராட்டமாக சீரிய தன்மையுடன் நகர்ந்தவை இரண்டு விடுதலைப் போராட்டங்களே. அவையாவன குர்திஸ்தான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமுமே. உலக ஒழுங்குகிற்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் வெற்றியை குவித்து, பெரும் நிலப் பரப்பை தம் வசம் வைத்துக் கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கும் சமாதானத்திற்கும் இலங்கை அரசை அழைப்பு விடுத்தமை இதற்கு தக்க எடுத்துக்காட்டு. எனினும் உலக நாடுகளின் ஆதரவுடன் புலிகளை ஒடுக்கி மிக மோசமான – மனித குலத்திற்கு விரோதமான அணுகுமுறைகளுடன் இனப்படுகொலைப் போரை  இலங்கை அரசு நடத்தியபோதும், போர் தர்மங்களை மீறாத வகையில் போரிட்டது விடுதலைப் புலிகள் அமைப்பு.

இதைப்போலவே, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் குர்திஸ்தான் போராளிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கள் அவர்கள் தனித்துவமான விடுதலை இயக்கம் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்த உதவியது. ஈழ மக்களைப் போலவே குர்திஸ்தான் மக்களும் இனப்படுகொலையை சந்தித்தவர்கள். துருக்கி அரசால் நிகழ்த்தப்பட்ட குர்திஸ் இனப்படுகொலையை சோவியத் ஒன்றியம் ஆதரித்ததுதான் மிகப் பெரிய கொடுமை. இடதுசாரிச் சிந்தனையை முன்னெடுப்பதாக கூறிய சேவியத் ஒன்றியம் இடதுசாரிச் சிந்தனை கொண்டு சீரிய தன்மையுடன் போராடிய குர்திஸ்தான் மக்களை இனப்படுகொலை செய்ய மறைமுகமாக ஆதரவளித்தது. உலக ஆதரவுடன் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட மேற்போந்த இனப்படுகொலைகள் வழிசமைத்துள்ளன.

குர்திஸ்தான் என்ற தனிநாட்டுக்கான சூழ்நிலை முதலாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்டது. அதற்காக அமரிக்காவும் பிரித்தானியாவும் ஆதரவளித்தன. எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக தனி நாட்டுக்கான கனவை குர்திஸ்மக்கள் சுமந்து வந்தனர். இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்த குர்திஸ் மக்கள் எதிர்பட்ட எல்லா அரசியல் நிலைகளையும் உரமாக்கிக் கொண்டு தனிநாட்டுக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்கள்.

ஒரு மரபினத்தின் விடுதலை மேலாதிக்கம் கொண்ட ஒரு பேரினவாத அரசின் கீழ் சாத்தியமேயில்லை. இலங்கையில் இத்தனை அனுபவங்களின் பின்னரும், சிங்கள மேலாதிக்கப் போக்கு நீங்கவில்லை. இன்றும் சிங்கள தலைவர்கள் கோபித்துக் கொள்வார்கள், சிங்கள மக்கள் கோபித்துக் கொள்வார்கள். அப்படிப் பேசுவதை விடுவோம், இப்படிப் பேசுவதை விடுவோம் என்ற சரணாகதி அரசியலையே முன்னெடுக்கிறோம். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் மனநிலையை ஸ்ரீலங்கா அரசு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீலங்கா அரசாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு நிம்மதியும் உரிமையும் இருக்கப் போவதில்லை. துப்பாக்கிகளும் இராணுவங்களும் எல்லாவற்றையும் கொழும்பிலிருந்து அடங்கி ஆளும்  போக்கும் தமிழ் மக்களுக்கு சினம் தருபவை. இதற்கு எதிராகவே இத்தனை ஆண்டு போராட்டம். அதன் பின்னரும் நிலமை இப்படித்தான் தொடர்கிறது. இதைப்போலவே ஈராக்கினால் பாக்தாக்கினால் ஆளப்படுவதை, ஒடுக்கப்படுவதை குர்திஸ் மக்கள் விரும்பில்லை. அவர்கள் எல்லாம் கடந்து போராடினார்கள். எந்த ஒடுக்குமுறையும் அற்ற சுதந்திர தேசத்தில் வாழ்வதில் உறுதியாய் இருந்தார்கள்.

நாமும் அத்தகைய நிலைகளை கடக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை குறித்த தலைவர் பிரபாகரனின் அனுமானங்களை நினைவுபடுத்த வேண்டும். அடுத்த தலைமுறை இன்னும் உத்வேகமாக போராடும் என்ற தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனத்தை மெய்யாக்க வேண்டும். சிங்கள அரசு கட்டமைக்கும் இன அழிப்பு வலையில் வீழ்ந்து அழியாதிருக்க வேண்டும். இதற்கு குர்திஸ் மக்களின் போராட்டம் எமக்கு பெரும் பாடமாக, பெரும் வழிகாட்டியாக முன் நிற்கிறது.

குர்திஸ்தான் இன மக்களின் தனிநாட்டுப் போராட்டத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. நிலம், மொழி, உரிமை, காலாசார அடையாளங்களுக்கான போராட்டம். ஈழப்போராட்டம் போல பெண்களுக்கு சம உரிமையை வழங்கிய போராட்டம்.  தலைவர் பிரபாகரன்மீதும் விடுதலைப் புலிப் போராளிகள் மீதும் குர்திஸ் போராளிகள் அன்பும் மதிப்பும் கொண்டவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிமீதும் சாதனைகள்மீதும் அவர்கள் மிகுந்த ஆர்வமும் பிரமிப்பும் கொண்டவர்கள். தனி ஈழம் பிறக்கும் என்ற நம்பிக்கையை இன்றைக்கும் கொண்டிருப்பவர்கள் குர்திஸ் மக்கள்.

தமிழீழம் என்று தமிழர்களால் அழைக்கப்படும் நாட்டினை தமிழிஸ்தான் என்று அழைக்கின்றனர் குர்திஸ் தலைவர்கள். என்றாவது ஒருநாள் அந்த நாடு மலரும் என்றும் அந்த நாட்டுடன் சகோதரத்துவம் பூண்டு பயணிக்க வேண்டும் என்றும் உறுதியாக நம்புபவர்கள் அந்த தலைவர்கள். உலகில் தம் சுய உரிமைக்காக போராடிய உன்னதமான இயக்கம் அவர்கள். அவர்களின் கனவின் வெற்றி எமக்கு நம்பிக்கையும் உத்வேகமும் தரக்கூடியது. இன விடுதலைக்காக போராடும் அந்த மக்களின் அபிமானம் எமக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.

கடந்த 2017இல் நடந்த வாக்கெடுப்பில், 91.83%வீதமான மக்கள், குர்திஸ்தான் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரித்து பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள். குர்திஸ்தான் ஈராக்கில் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். இதனுடைய எல்லைகளாக ஈரான், துருக்கி, சிரியா, ஆர்மோனியா போன்ற நாடுகள் காணப்படுகின்றன. குர்தி மொழிபேசும் குர்தி மக்கள் உலகின் நீண்ட வரலாறு கொண்ட ஒரு மரபினமாகும். ஈழத் தமிழ் மக்கள் எவ்வாறு ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்குள் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டார்களோ அவ்வாறே குர்திஸ் மக்களும் ஈராக் என்ற நாட்டினால் அடிமை கொள்ளப்பட்டார்கள். குர்திஸ்தான் எண்ணை வளம் மிகுந்த அழகிய நாடு. இதனால் ஈராக் மாத்திரமின்றி எல்லைப் புற நாடுகளாலும் குர்திஸ் மக்கள் ஒடுக்குமுறைக்கும் சுறண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் சந்தித்திருக்கும் ஈராக்கின் அச்சுறுத்தல் நெருக்கடியிலிருந்தும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களின் தனிநாட்டு போராட்டம், ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியது. அத்துடன் துருக்கியின் இன அழிப்புக்கள் ஒரு புறம், ஈராக் என்ற கடும்போக்கான நாடு மறுபுறம், அதற்குள்ளான அவர்களின் உறுதியான போராட்டம் எமக்கு பல வழிகளிலும் படிப்பினைகளையும் தரக்கூடியது. குறிப்பாக, ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், ஒரு தலைமையின் இடவெளி கொண்ட பின்னர் தமது சுதந்திரத்த்திற்காக போராடுபவர்கள் என்ற வகையில் குர்திஸ் மக்களின் போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது.

-தீபச்செல்வன்

நன்றி – இலக்கு மின்னிதழ்

Leave A Reply

Your email address will not be published.