`இன்னொரு ஹீரோயின்… ஆனா அது சஸ்பென்ஸ்!’- ஹீரோவானார் அண்ணாச்சி `லெஜண்ட் சரவணன்’

0

அவரின் விளம்பரங்கள் ரீச் ஆனபோதே சரவணன் அருள் திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனால், இதுகுறித்து சரவணன் பேசாமலே இருந்துவந்தார்.

சரவணன் அருள்

சென்னை அண்ணா நகரில், சரவணா ஸ்டோர்ஸின் `தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ கிளை 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல ரீச் கிடைத்தது. சரவணன் அருள், அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார்.

சரவணன் அருள்
சரவணன் அருள்

திரைப்பிரபலங்கள் துணையுடன் விளம்பரத்தில் கலக்கிய சரவணன் அருள் ஒருகட்டத்தில் சோலோ பெர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். அவரின் கடையின் சேல்ஸைவிட அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் பேசுபொருளாகவும் மாறிப்போனார். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் விதவிதமான ஆடைகளில் வேறுவேறு கெட்டப்களில் தோன்றி மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தவாறே இருந்தார். அவரின் விளம்பரங்கள் ரீச் ஆனபோதே சரவணன் அருள் திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனால், இதுகுறித்து சரவணன் பேசாமலே இருந்துவந்தார்.

இந்த நிலையில், தற்போது அந்த சர்ப்ரைஸை உடைத்துவிட்டார் சரவணன். எதிர்பார்த்ததுபோலவே அவர் நடிக்கும் படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் ஆஸ்தான இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரிதான் இந்தப் படத்தை இயக்கவுள்ளனர். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கவுள்ளார். வைரமுத்து பாடல் எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவுள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இதற்கிடையே இந்தப் படத்தின் பூஜை இன்று வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது. மூத்த இயக்குநர் எஸ்.பி முத்துராமன் முதல் கிளாப் அடித்து படத்தை தொடங்கிவைத்தார். இதற்கிடையே, படத்தின் ஷூட்டிங் சென்னை, பொள்ளாச்சி, இமயமலைப் பகுதிகளில் நடக்கும் என அறிவித்துள்ள படக்குழு, இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டரில் இன்னொரு பாப்புலர் ஹீரோயின் நடிக்கவுள்ளார் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.