நிஷாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்திற்கு எவ்வாறு தப்பிச்சென்றார்? விழி பிதுங்கும் அரசு !

0

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சிக்கியவர்கள் மற்றும் ஊழல்செய்த முன்னாள் அமைச்சர்களுக்கு விரைவில் சட்டத்திற்கு முன்பாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுப்பதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமானது கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சேறுபூசலாகும் என்றும் அவர் விமர்சித்தார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டில் பொய்யான வழக்குகளை தாக்கல் செய்து, சிறைச்சாலைகளில் அடைப்பதற்கான முயற்சிளில் ஈடுபட்ட சி.ஐ.டி நிஷாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு தப்பியோடியுள்ளார்.

இந்த அதிகாரி எவ்வாறு அங்கு வேகமாக சென்றார் என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இவை அனைத்தையும் மூடிமறைப்பதற்கே தற்போது புதிய முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடத்தப்பட்டு விசாரணை செய்ததாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்னும் வெளியே வந்து முறையிடவில்லை. ஏன் அவர் வெளியே வந்து கூறமறுத்துவருகிறார்? இதுமுற்றுமுழுதான பொய். புதிய அரசாங்கம் மீது சேறுபூசுவதற்கான முயற்சியாகும்.

இப்போது அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதி வீதியில் உலாவுகிறார். இன்று இந்த நாட்டில் விமர்சனம் முன்வைக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. தேர்தலில் தோல்வியடைந்து ஒருவாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.

2015ம் ஆண்டு நாங்கள் தோல்வியடைந்தபோது ஒரே வருடத்திற்கு எங்களை சிறையில் அடைத்தார்கள். இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜித சேனாரத்ன வெளியே வந்து அரசாங்கத்தை கடுமையான விமர்சிக்கின்றார்.

2015ம் ஆண்டில் இப்படியான சுதந்திரத்தை கண்டீர்களா? 2015இல் நாங்கள் நீதிமன்றங்கள்தோறும் அழைக்கப்பட்டோம். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவ்வாறு இருக்கிறதா?

இதனை விடவும் இந்த நாட்டு மக்கள் எவ்வகையான சுதந்திரத்தை எதிர்பார்கின்றார்கள்?” என அவர் இதன் போது கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.