முன்னாள் அமைச்சர் ரிசாட் ஜனாதிபதிக்கு கடிதம்

0

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், வில்பத்து தேசிய வனம் அழிப்பு தொடர்பில் தன்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை நடாத்துமாறு வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக சகோதர மொழி தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு தன்னுடையவும், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களினதும் வாழ்த்துக்களைத் முதலில் தெரிவித்துக் கொள்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார துஸ்பிரயோகம் செய்து வில்பத்து வனப் பகுதியில் காணப்படும் அரச காணிகள் எந்தவொன்றையும் அழிக்கவோ சேதப்படுத்தவோ இல்லையெனவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார். இருப்பினும், இது தொடர்பில் தனக்கு எதிராக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதனால், வில்பத்து வனப் பகுதிக்கு சிறிதளவிலோ அல்லது பாரியளவிலோ ஏதும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பின், அது தொடர்பில் பொறுப்புக்குரியவர் யார் என்பது குறித்து கண்டறிய சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலும் தன்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல விசாரணைகளிலும் தான் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தேவை என்றிருந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அக்கடிதத்தில் மேலும் கேட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கடிதம் மூலம் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளதாக சகோதர ஊடகமொன்று மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.