ராஜபக்சக்களை காப்பாற்றும் மைத்திரி அரசைவிட கோத்தபாய அரசு மேல்…

0

இலங்கையின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் தமிழ் மக்களுக்கு அதனால் எந்த பாதிப்புமில்லை கோத்தபாய ராஜபக்சவிற்கு மிகுந்த பாதிப்பு என்று ஈழம் நியூஸ் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் முன்னைய காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. 

எதிர்பார்த்ததைப் போலவே இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்றவுடன் சர்வதேச சமூகத்துடன் மோதும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க அரசு தமிழர்களுக்கு ஒரு முகத்தையும் ராஜபக்ஷக்களுக்கு இன்னொரு முகத்தையும் சர்வதேச சமூகத்திற்கு மற்றொரு முகத்தையும் காண்பித்தது.

தமிழர்களின் ஆதரவுடன் அவர்களின் வாக்குகளுடன் ஆட்சியை கைப்பற்றி அரசு நியமித்த ரணில் மைத்திரி பால சிறிசேன அரசு தமிழ் மக்களுக்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு ராஜபக்ஷக்களுக்கு பெரும் விசுவாசி களாகவும் சிங்களப் பேரினவாதத்தின் மீது பெரும் அக்கறை கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் அவர்களைக் காட்டிலும் வெளிப்படையாக இனவாதத்தைக் கக்கி தமிழர்களை அழிப்பதில் வெளிப்படை கொள்கையை கடைப் பிடிக்கின்ற கோத்தபாயவின் அரசு மேலானது என்று சொல்லத் தோன்றுகின்றது.

கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன அரசு கோத்தபாய ராஜபக்சவையும் மஹிந்த ராஜபக்ஷவையும் காப்பாற்றுவதற்கு சர்வதேசத்தில் நாடகங்களை ஆடியது. அத்துடன் அவர்களின் போர்க்குற்றம் இனப்படுகொலை என்பவற்றை பாதுகாக்க தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகத்தை கச்சிதமாக நிறைவேற்றியது.

இந்தச் சூழ்நிலையில் கோத்தபாய அரசு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றது. எனினும் அவ்வாறு தன்னிச்சையாக இலங்கை வெளியேறுவதை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏற்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர்கள் இதைக்கண்டு சோர்வடைய வில்லை. மாறாக உற்சாகம் கொண்டுள்ளனர். தற்போதும் இலங்கை அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை நடத்தி போர்க் குற்றங்களுக்கு தீர்வு காண்பதாக கூறி மீண்டும் ஒரு நாடகத்தை நடிக்க முற்படுகின்றது.

எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலேயே இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்பதை தமிழர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தாயகத்திலிருந்தும் ஜெனிவாவிலும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இனியும் இலங்கை அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்காமல் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசு நீதி கட்டமைப்பை ஏற்படுத்தாமல் சர்வதேச விசாரணை நடத்திய இனப்படுகொலை போர்க் குற்றத்திற்கு நீதியை காண முன்வர வேண்டும்.

இலங்கை அரசுகளின் காலத்தை இழுத்தடிக்கும் சூழ்ச்சிகளையும் கள்ளத்தனங்களையும் புரிந்துகொண்டு விரைவில் நீதியை நிலைநாட்டி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையில் மீள் வாழ்வையையும் நம்பிக்கையையும் கட்டி எழுப்ப வேண்டும்.

ஆசிரியர் – ஈழம் நியூஸ். 28.02.2020

Leave A Reply

Your email address will not be published.