ஈழத் தமிழர்கள் அனுபவிக்காத இன்னல்களா?

0

ஈழத் தமிழ் மக்கள் அனுபவிக்காத இன்னல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றதா? இலங்கையை ஆண்ட சிங்கள அரசும் அதன் இராணுவப் படைகளும் தமிழர்கள் மீது எண்ணற்ற இனப் படுகொலைகளையும் இன்னல்களையும் திணித்தது.

உணவுத் தடை, மருந்து தடை, போக்குவரத்தைத் தடை, வீடுகளுக்குள் முடங்கிக் கூடிய வாழ்வு என்று ஈழத் தமிழர்கள் வரலாற்றின் கொடூரப் பக்கங்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்தவர்கள்.

இன்று கொரோனா தாக்கத்தால் உலகம் எங்கும் மக்கள் சிதறடிக்கப்பட்ட வருகின்றனர். வீடுகளில் முடங்கி வைக்கப்படுகின்றனர். போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. மாநிலங்களும் நகரங்களும் துண்டிக்கப்படுகின்றன.

நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துகள் கூட தடைப்பட்டுள்ளன. இப்போது சர்வதேச போக்குவரத்தையும் இலங்கை அரசு நிறுத்தியுள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சமயத்தில் கூட மூடப்படாத கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது வைரஸ் அபாயம் காரணமாக மூடப்படுகின்றது.

இலங்கையில் இதுவரையில் 48 க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் நோய்த்தொற்றின் அபாயமும் பொருள் கட்டுப்பாடுகளில் கவலையும் நிலைகொள்ளத் தொடங்கி உள்ளன. சில பொருட்கள் தட்டுப்பாடாகியுள்ளன. அத்துடன் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இலங்கையில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் இலங்கையின் அரசியல் பொருளாதார மற்றும் மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என அதிபர் கோத்தபாய ராஜபக்ச அச்சமடைந்துள்ளனர்.

இந்த அபாய நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் நலம் அடைய வேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். போரினாலும் போர்த் துன்பத்தின் நோயினாலும் உயிர்களையும் வாழ்க்கையை இழந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை இத்தகைய நெருக்கடிகள் புதிதல்ல நெருக்கடிகளைக் கடந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்தச் சூழ்நிலையில் அனைவரும் சுகாதார விழிப்புணர்வுடன் பொறுப்புணர்வோடு செய்யப்பட்டு உலக மக்களுடன் இணைந்து இந்த நெருக்கடியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

ஆசிரியர் – ஈழம்நியூஸ். 18-03-2020

Leave A Reply

Your email address will not be published.