கந்தகாடு இரண்டாவது அலையா..? சிக்கியிருக்கும் இராணுவம்

0

நாட்டில் இப்போது தோன்றியிருப்பது கொரோனாவின் இரண்டாவது அலை அல்ல என்றே அரசாங்கம் கூறினாலும் இது முதலாவது அலையின் தொடர்ச்சியா என்பது பலருக்குச் சந்தேகமாகவே உள்ளது.

ஏனென்றால் கொரோனாவின் முதலாவது அலை கிட்டத்தட்ட ஓய்ந்து போகின்ற கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில்தான், மீண்டும் தொற்று தீவிரமாகியிருக்கின்றது. முதல் அலையில் மிக மோசமாகச் சிக்கிப் போனது கடற்படைதான்.

வெலிசரை கடற்படைத் தளத்துக்குள் தோன்றிய தொற்று மையத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

வெலிசரை கடற்படைத்தளத்துக்குள் சகாதார அதிகாரிகளை அனுமதிக்காமல் தாங்களே அதனைக் கையாளுவதாக கடற்படையினர் எடுத்த முடிவு பெரும் நெருக்கடியில் கொண்டு போய்ச் சேர்த்தது. கடைசியில் வேறு வழியின்றி வெலிசரை கடற்படை முகாமில் இருந்து பெரும்பாலான படையினர் வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு தொற்று குறையத் தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கூட வடக்கில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படையினர் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னமும் கடற்படையின் தொற்று வெடிப்பு முற்றாக அடங்கவில்லை.

எரிமலை வெடிப்புக்குப் பின்னர் அவ்வப்போது சாம்பல் வெளியேறுவது போன்று கடற்படையினர் மத்தியில் தொற்று குறைந்துள்ள போதும் அவ்வப்போது தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடற்படையினராகவே இருந்தனர். சுமார் 1000 கடற்படையினர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா தொற்று கடற்படையினரை பொறுத்தவரையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. மூன்று மாதங்களுக்கும் மேலாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கின்றது.

இது கடற்படையின் நன்மதிப்பையும் கணிசமாகவே சரித்து விட்டது. இப்போதைய அலையில் சிக்கியிருப்பது இராணுவம். இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு முகாமே இப்போது பெரும் சிக்கலான விடயமாக மாறியிருக்கின்றது.

சமூகத்தில் கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றாகவே இல்லாது போய் விட்டதாக கருதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கந்தகாடு முகாமில் இருந்து சமூகத்துக்கு தொற்று கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை.

கந்தகாடு முகாமில் கைதிகள் மத்தியில் பரவியுள்ள தொற்று பெரும் அச்சுறுத்தலுக்குரிய விடயமல்ல. கடற்படையினர் மத்தியில் ஏற்பட்ட தொற்றைக் கட்டுப்படுத்தியதை விட இதனை இலகுவாக கையாளலாம் என்றே அதிகாரிகள் முதலில் நினைத்தனர்.

ஏனென்றால் கடற்படையினர் வெலிசரை தளத்துக்குள் இருந்தாலும் அவர்களுக்கு வெளியே நடமாடும் சுதந்திரம் இருந்தது. ஆனால் கந்தகாடு முகாமில் இருந்தவர்களின் நிலை அவ்வாறில்லை. அந்த முகாமில் இருந்தவர்கள் புனர்வாழ்வுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள்.

அவர்களால் வெளியே செல்ல முடியாது. அவர்களை பார்வையிட வெளியே இருந்து யாரேனும் வந்தால் தவிர வேறெந்த வழியிலும் அவர்களால் தொற்று வெளியே கடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.

புனர்வாழ்வு முடித்துக் கொண்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கைதி ஒருவர் மூலம்தான் கந்தகாடு என்ற எரிமலை, பரவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்ற விடயமே சுகாதார அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கின்றது.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை.

எனவே எந்த அறிகுறிகளையும் உணராத சுகதேகியாக தம்மை தாமே நம்பிக் கொண்டிருந்த தொற்றாளர்கள் சமூகத்துக்கு அதனைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். புனர்வாழ்வு முகாம் நீதியமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிர்வகிப்பது இராணுவத்தின் புனர்வாழ்வுப் பிரிவுதான்.

இங்குதான் முன்னர் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. பின்னர் இது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சீர்திருத்தும் நிலையமாக மாற்றப்பட்டது.

இந்த கந்தகாடு முகாமில் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளே இந்த தொற்றை வெளியே சமூகத்துக்கு காவிச் சென்றிருக்கின்றார்கள். அதனால்தான் முதல் அலையில் கடற்படையினரும் இப்போதைய அலையில் இராணுவத்தினரும் பழி காவிகளாக மாறியுள்ளனர்.

புனர்வாழ்வு முகாமில் ஆலோசகர்களாக பணியாற்றும் இராணுவ அதிகாரிகள் விடுமுறையில் சென்ற போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர்.

பொது இடங்கள் பொது போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று பலருக்கு காவிச் செல்லப்பட்டிருகு்கின்றது. இதையடுத்தே சுமார் 70 நாட்களாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அப்பால் சமூகத்தில் கண்டறியப்படாத தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இப்போது தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு வெளியே பல இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

எனினும் கந்தகாடு முகாமினதும் அதன் மூலம் சமூகத்திலும் பரவியுள்ள தொற்று நிலைமை குறித்தும் அரசாங்கம் கூடியளவுக்கு அடக்கி வாசிக்கவே முற்படுகின்றது.

முதல் அலை தோற்றம் பெற்ற போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்குச் சட்டம் பெரிதும் உதவியது. எங்கெல்லாம் தொற்று இருக்கிறது என்று சரியாக கண்டறியப்படாத நிழலையில் முழு ஊரடங்கு தொற்றாளர்கள் புதிய இடங்களுக்குச் செல்வதை தடுத்தது. அது அடுத்தவருக்கு காவிச் செல்வதையும் குறைத்தது.

முடக்க நிழலை என்பது சர்வதேச அளவில் முழுமையான வெற்றியை தரவில்லை. இலங்கையைப் போலவே தற்காலிக வெற்றியைத் தான் கொடுத்திருக்கின்றது.

ஆனால் இந்த முறை ஊரடங்குச் சட்டத்தை போடவோ முடக்க நிலையை அறிவிக்கவோ அரசாங்கம் தயாராக இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கப் போகின்ற பொதுத் தேர்தலை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடு இதில் முதலாவது. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் வேட்பாரள்கள் பிரச்சாரம் செய்ய முடியாது. இன்னொரு பக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கினால் அது அரசாங்கத்தின் தவறாக தோல்வியாக அடையாளப்படுத்தப்படும் என்ற அச்சமும் உள்ளது.

தேர்தல் சூழலில் இந்த இரண்டுமே அரசாங்கத்திற்கு பாதகமான விடயங்கள். இதனைக் கருத்திற் கொண்டு தான் அரசாங்கம் கொரோனாவின் இப்போதைய அலையை இரண்டாவது அலையாக ஒத்துக் கொள்ள தயங்குகின்றது.

ஏற்கனவே ஒரு அலை அடித்து ஓய்ந்து விட்ட பின்னர் மிகப் பெரியளவானோர் தொற்றுக்குள்ளாகியிப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை இரண்டாவது அலை என்பதில் என்ன தவறு? அரசாங்கம் தொற்று குறித்த தகவல்களை மறைக்கின்றது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

அரசியல் நலன்களுக்காக கொரோனா பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிடாமல் தவிர்க்கின்றது என்று உறுதியாக நம்புகின்றன எதிர்க்கட்சிகள். தேர்தலில் பின்னடைவு வந்துவிடக்கூடாது என்பதற்காககஅரசாங்கம் இதனை மறைத்தால் ஆச்சரியமில்லை.

ஏனென்றால் கொரோனாவை வென்று விட்டதாக மார் தட்டியவர்கள் இரண்டாவது போர் வெற்றியாக இதனை அடையாளப் படுத்தியவர்கள் இப்போது தோல்வியடைந்து நிற்கின்றார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றவர்களே இப்போது தோல்வியைச் சந்தித்து நிற்கின்றார்கள்.

இவர்களே இப்போது மக்கள் மத்தியில் அச்சத்துக்குரியவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். கந்தகாடு முகாம் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மத்தியில் தோன்றியுள்ள தொற்றின் உண்மையான பரிமாணம் வெளிப்படாத வரை அவர்களைப் பற்றிய பொய்ச் செய்திகள் தாராளமாகவே வந்து கொண்டிருக்கும்…

Leave A Reply

Your email address will not be published.