பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்!

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த தியாகராஜா (43) என்பவரே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக் கிழமை இவரது சடலம் அவரது அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டதையடுத்து கடந்த புதன்கிழமை இவர் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில்,வீதியில் நின்ற இவரைப் பொறுப்பேற்ற பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இவரது சடலம் வியாழக்கிழமை அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளரால் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவரது தலை, முகம், கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டன.

புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இவர், மறுநாள் வியாழக்கிழமை எவ்வாறு மீண்டும் வீட்டுக்குச் சென்றார் என்பது தெரியவில்லை. ஏனெனில் இவரது வீடு உரிமையாளரால் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக குறித்த வீட்டின் உரிமையாளரின் நண்பர்கள் சிலரால் இவர் தாக்கப்பட்டே புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதேவேளை, இவரது நெருங்கிய உறவினர்கள் எவரும் பிரான்ஸில் இல்லை எனவும், இவரது மனைவி இலங்கையில் வசிப்பதாகவும் கொல்லப்பட்ட தியாகராஜாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தியாகராஜாவின் சடலம் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.