சிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்!

0

சிட்னியில் தமிழீழக் கரும்புலிகள் நாள் யூலை 5 2020 அன்று எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தடைவரும் என்ற அச்சம் காரணமாக நீண்டகாலமாக கரும்புலிகள்  தினம் சிட்னியில் நினைவுகூரப்பட்டதில்லை. 

ஆயினும் இவ்வருடம் தலைவரின் பிள்ளைகள் அமைப்பினரின் ஒழுங்குபடுத்தலில் 346 கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டு இந்நிகழ்வு எழுச்சியாக நினைவுகூரப்பட்டது.

05-07-2020 அன்று மாலை 4.30 மணிக்கு பென்டில் கில்லில் அமைந்துள்ள யாழ். மண்டபத்தில் மாவீரர் லெப்.சாள்கிள்ளை அவர்களின் சகோதரரும்  கடற்புலிகளின் பயிற்சி ஆசிரியருமான வேதராச தினேஷ் அவர்கள் பொதுச்சுடர் ஏற்ற நினைவுவணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அவுஸ்திரேலியா பூர்விக மக்களின் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவரின் பிள்ளைகளின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமாகிய பேரின்பராசா முகுந்தன் அவர்கள் ஏற்ற, அவுஸ்திரேலியாத் தேசியக் கொடியை நியுச்சவுத்வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களின் நண்பருமான Hugh McDermott அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான காளிராசா நவேந்திரா அவர்களும் ஏற்றிவைத்தனர்.

முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு  கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்  அவர்களின் சகோதரர் ஐங்கரனும் முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப்படத்திற்கு  கப்டன் யோகனின் துணைவியாரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கலா அவர்களும் ஈகைச்சுடர்களை ஏற்றிவைக்க சமநேரத்தில் அனைத்து கரும்புலிகளின் திருவுருவப்படங்களும் பொதுமக்கள் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்தனர்.

முல்லை ஓசை அணியின் ஒருங்கிணைப்பாளர் செல்வராசா தனுசாந் அவர்கள் மலர்வணக்கத்தை ஆரம்பித்துவைக்க பொதுமக்கள் தேசத்தின் புயல்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தமிழ்நிலா கரும்புலிகளைப் பற்றிய கவிதை ஒன்றை வழங்கினார். நியுச்சவுத்வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Hugh McDermott உரை, தமிழீழ பாடகர் ரமேசன் அவர்களின் கரும்புலிகள் பாடல், வன்சிகா வர்சினி வெற்றிச்செல்வன் அவர்களின் கவிதை ஆகியன இடம்பெற்றன.

தலைவரின் பிள்ளைகளின் கரும்புலிகள் நாள் அறிக்கையினை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான தர்மலிங்கம் யோகராசா அவர்கள் வாசித்தார். தலைவரின் பிள்ளைகளின் கோசப்பாடலைத் தொடர்ந்து கொடிகள் இறக்கப்பட கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இந்நிகழ்வுக்கான மண்டப வடிவமைப்பை முல்லை ஓசை அணியினர் மிகவும் எழுச்சிக்கோலமாக மாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தலைவனின் பிள்ளைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை…

நிறைவேற்றுக் குழு

தலைவரின் பிள்ளைகள்

சிட்னி, அவுஸ்திரேலியா

05-07-2020

கரும்புலிகள் நாள் அறிக்கை -2020

எங்கள் உயிரிலும் மேலான உலகத் தமிழ் உறவுகளே!

இன்றைய நாள் ஒரு புனிதமான நாள். மகத்துவங்களாலும் உன்னதங்களாலும் உயிர்பெற்றதொரு நாள். இன்னுயிர்களால் எங்கள் தேச வரலாற்றை எழுதிய புனிதர்களின் நினைவுநாள். ஆம். ஜூலை 05, கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிர்களை கொடையாக அளித்த ஒப்பற்ற கரும்புலி வீரர்களைப் பூசிக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

“பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்..” என்றார் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

எமது அன்பிற்குரிய உறவுகளே,

அவுஸ்திரேலிய நாட்டைப் பொறுத்த வரையில், கடந்த பல தசாப்தங்களாக கரும்புலிகள்  நாள் நினைவுகூரப்படுவதில்லை. இந்த மகத்துவமான மனிதர்களை நினைவுகூருவதற்கு சட்டச் சிக்கல் வரும் என்ற அச்சமே இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனாலும், குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இந்த நாட்டிலே எம்மவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் ஏற்படாது ஏற்படுத்தப்படாது என்பதை நாம் முழுமையாக நம்புகிறோம்.

சிங்கள அரசின் இன அழிப்புக் கொடுமைகளுக்கு எதிராக எமது நாட்டிலே தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறிய விதையாக – முளையாக தொடங்கிய அப் போராட்டம் ஆரம்ப காலம் முதலே அரசின் பெரும் அடக்குமுறைகளுக்கு மத்தியில்தான் தலைவர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு, உலகின் உன்னதமான போராட்டமாக பரிணமித்த வரலாறு எங்கள் யாவருக்கும் தெரியும். எனவே சனநாயகப் போராட்டங்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அடக்குமுறை மனப்பான்மைகொண்ட   அரசுகள் அங்கீகரித்ததாக வரலாறு இல்லை.

எங்கள் தேசத்திற்காக, எங்கள் மக்களுக்காக, எங்கள் உரிமைக்காக, சாவுக்கு நாள் குறித்து, சாவுக்கு நேரம் குறித்து சென்ற சரித்திர நாயகர்களை நினைவு கூருவதற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டால் சனநாயகரீதியில் அவற்றை முறியடிக்கவேண்டியது நமது கடமையல்லவா? எனவே எத்தகைய சட்ட சிக்கல் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு இந்த நினைவு நாளை தொடர்ந்தும் எமது மக்களின் பேராதரவுடன்  நடாத்துவோம் என தலைவரின் பிள்ளைகள் ஆகிய நாம் திடசங்கற்பம்பூண்டுள்ளோம்.

ஏனெனில் நாம் ஒரு கொடிய காலத்தில் வாழ்கிறோம். உலகின் கண்களுக்கு முன்னாலே எமது  இனம் அழிக்கப்பட்டது போல இன்று எமது கண்களுக்கு முன்னாலே ஈழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளும் வரலாறும் அழிக்கப்படுகின்றன. இதுவரை காலமும் சிங்கள அரசு எமது போராட்ட வரலாற்றையும் நினைவுகளையும் அழித்து வந்த நிலையில் இப்போது எம்மவர்களில் சிலரும் தத்தம் அரசியல் கட்சி நோக்கங்களுக்காகவும்  சுயநலங்களுக்காகவும் இதனை செய்வது இன்னுமொரு கொடுமையாகும்.

எனவே இந்தப் புனித வரலாற்றை, அதன் உண்மை தன்மையுடன் அடுத்த சந்ததிக்கு கையளிக்க வேண்டியது எமது கடமையல்லவா? அற்ப அரசியல்களுக்கும் இனவிரோத சூழ்ச்சிகளுக்கும் வரலாற்றையும் நினைவுகளையும் பலிக்கடவாக்கும் கொடிய திட்டங்களை முறியடிக்க, எம் புனிதர்களை நினைவுகூர்வது அவசியமான கடமையாகும். அதன் முதல் கட்டமாக எம் தேசத்தின் அதி உன்னதர்களாக வணங்கப்படும் கரும்புலிகளை போற்றும் கரும்புலிகள் தினத்தை அவுஸ்ரேலிய மண்ணில் நினைவுகூர்வதெனத் தீர்மானித்தோம்.

அத்துடன் கரும்புலிகளின் வரலாறு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வரலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, எம் விடுதலைக்காக மாண்ட மாவீரர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றையும் நாம் உண்மை வரலாற்று வடிவமாக ஆவணப்படுத்த தீர்மானித்துள்ளோம். அவற்றை வரலாற்று ஆவணங்களாகவும் புத்தகங்களாகவும் பதிப்பித்து, எம் அடுத்த தலைமுறையிடம் கையளிப்பது எங்கள் அனைவரதும் தலையாய கடமை ஆகும்.

அன்புக்குரியவர்களே,

தாயகத்தில் கடந்த 2009இற்கு முன்னரான காலத்தில், முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவுநாள், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாள், குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுநாள், அன்னைபூபதி அவர்களின் நினைவுநாள், கேணல் கிட்டு அவர்களின் நினைவு நாள் போன்ற புனித நாட்கள் நினைவுகூரப்பட்டு வந்த நிலையில், இப்போது மாவீரர் தினமும் மே 18 இனப்படுகொலை தினமும் மாத்திரமே நினைவுகூரப்படுகின்றது.

எம் போராளித் தெய்வங்களின் தியாகங்களை அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ளும் வகையில், கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்வதைப்போல மேற்குறிப்பிட்ட அனைத்துப் புனித தினங்களையும் இம் மண்ணில் நினைவுகூர்ந்து, எம் மண்ணின் ஒப்பற்ற தியாகங்களுக்கும் நிகரற்ற வரலாற்றுக்கும் நேர்மையாக வாழும் உன்னதப் பண்பை எமது புதிய – இளைய தலைமுறைகளின் மத்தியில் ஏற்படுத்த தலைவரின் பிள்ளைகள் ஆகிய நாம் அயராது உழைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது தேசத்திற்காய் தம் உடல், உயிர் யாவற்றையும் கொடையாக்கி, சாவை அறிந்தும் இனத்திற்காய் சிரித்தபடியே தம்மை ஆகுதியாக்கிய கரிய வேங்கைகளுக்கு எங்கள் தலைகளைச் சாய்த்து வணக்கம் செலுத்தும் வேளையில்  அவர்களின் தியாகத்துக்கு என்றும் நேர்மையாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!

நன்றி

நிறைவேற்றுக் குழு

தலைவரின் பிள்ளைகள்                                                                      

Leave A Reply

Your email address will not be published.