டிக் டாக் மீதான தடையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

0

சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு விதித்த தடையை கொலம்பியா மாகாண நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு அந்த மோதல்போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அந்தச் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் வீ சாட் செயலிக்கும் தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தத் தடை உத்தரவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

இத்தகைய சூழலில், டிக் டாக் செயலி மீதான தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா மாகாண நீதிமன்றத்தில் பைட் டான்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இதை நீதிமன்றம் அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது.

அப்போது, பைட் டான்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜான் ஹால் வாதிடுகையில், “டிக் டாக் செயலி மூலமாக இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். டிக் டாக் செயலிக்கு உடனடியாகத் தடை விதிப்பது பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

தற்போதைய பயனாளர்களுக்கு செயலியின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான வடிவம் கிடைக்காது. அதன் காரணமாக தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்´ என்றார்.

அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், “சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்த நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வருகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது´ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி கார்ல் நிகோலஸ், டிக் டாக் செயலி மீது விதிக்கப்பட்ட தடையின் அமலாக்கத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். எனினும், அதற்கான காரணங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

முன்னதாக, டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். அதையடுத்து, ஆரக்கிள், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும், அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக், வீசாட் தொடர்பான விரிவான தடை உத்தரவுகள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது கொலம்பியா மாகாண நீதிபதி வெளியிட்ட ஒத்திவைப்பு உத்தரவில் நவம்பர் மாதம் அமலாகவுள்ள தடையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.