கொரோனாவின் அபாயத்தை உணர்வோமா?

0

இன்றைய காலம் என்பது மிகவும் அபாயமாகிவிட்டது. உலகிற்கே ஏற்பட்ட மாபெரும் சாபக்கேடாக இன்று கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. இதுவரை காலம் தப்பிப் பிழைத்த இலங்கையும் கொரோனாவின் அலையில் சிக்குண்டு விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.

அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது.நிலைமை மோசமடையும் பட்சத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் களியாட்டங்களில் ஈடுபடுதல், அதிகளவில் மக்கள் கூடுதல், ரயில் போன்ற பொது போக்குவரத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் பயணித்தல் என்பன தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.

மக்கள் கண்டிப்பாக முகக் கவசங்கள் அணிந்து சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார்களேயானால் கூடுமானவரை நோய் அணுகாமல் பாதுகாக்க முடியும்.

இதேவேளை, காற்றின் மூலமும்  கொரோனா பரவும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. 

சமூக இடைவெளியை பின்பற்றினால் கூட காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுமானால் அதனை கட்டுப்படுத்துவது கடினம் என்பதே குறித்த ஆய்வு நிறுவனத்தின் கருத்தாகும்.

இது ஒருபுறமிருக்க அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் குணமடைந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். அங்கிருந்து அவர் மக்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

அமெரிக்க மக்கள் கொரோனா தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதனிடையே ட்ரம்ப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் இன்னும் ஆபத்தான கட்டத்தை முழுமையாகத் தாண்டவில்லை என்று கூறியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும்  கொரோனா வந்துள்ளமையும் மாரடைப்பு போன்ற நோய்கள் அவர்களை தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமானதாகும்.  

தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 52 இலட்சத்து 31,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்தந்த நாட்டு அரசுகளால் உறுதிபடுத்தப்பட்ட தகவல் என்றாலும், உண்மையான பாதிப்பு இதை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதன் முக்கிய இயக்குநர்கள் 34 பேர் கலந்துகொண்டனர்.

இதில், கொரோனாவால் உலகம் முழுவதும் 10 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தங்களின் சிறந்த மதிப்பீடாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 760 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 76 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.

Leave A Reply

Your email address will not be published.