தமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு? சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

0

ஈழத்தில் இன அழிப்பு தொடர்கின்ற நிலையில் ஏற்கனவே நடந்த இன அழிப்பிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம். நடந்த இனழிப்பிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாப்பதுடன் தொடரும் இன அழிப்புக்கு ஒப்புதல் அளிப்பதற்கு, சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயல்வதாகவும் அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் இழைத்த மாபெரும் துரோகங்களினால் தமிழ் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளமையை நினைவுபடுத்துவதாகவும் எனினும் கூட்டமைப்பு இப்போதும் தனது தமிழின துரோகத்தை தொடர்வதாகவும் அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த பத்தாண்டுகளில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பெரும் துரோகங்களை இழைத்து வந்துள்ளது. கைகட்டி, வாய்மூடி மௌனிகளாக இருந்து ஈழத்தில் தொடரும் இன அழிப்பை மறைத்து வரும் வேலையில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. தமது பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் இப்படி காலத்தை கடத்திய கூட்டமைப்பு கடந்த ஆட்சியில் நேரடித் துரோகங்களையும் இழைத்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது.

அந்த வகையில் மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சவினரை சர்வதேச அரங்கில் பாதுகாக்கும் விதமாக ஐ.நாவில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் துரோகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில் ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களாக மாறியுள்ளனர். இன்றைய ஆட்சியாளர்களான இனப்படுகொலையாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் கால அவகாசம் வழங்கி, கோத்தபாய மற்றும் மகிந்தவை காப்பாற்றும் இரண்டாம் கட்ட முயற்சியில் – நேரடித் துரோகத்தில் ஈடுபடுகின்றமை வண்மையாக கண்டித்தக்கது.

ஐ.நாவில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் வழங்க தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகின்ற நிலையில், சுமந்திரன் ஸ்ரீலங்கா அரசை பாதுகாக்க முனைவது எத்தகைய துரோகச் செயலாக இருக்கும்? இது ஈழத்தின் நடந்த இனப்படுடிகொலையை மூடி மறைக்க உடந்தையாக அமைவதுடன் ஸ்ரீலங்கா அரசின் தொடரும் தமிழின அழிப்புக்கு ஒப்புதலும் ஆணையும் கோரும் விதமாகவே அமைந்துள்ளது.

வேலியே பயிரை மேய்வது போல, ஸ்ரீலங்கா அரசு தமிழினத்தை அழித்து வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு காவலாக உள்ளமை தமிழனத்திற்கு இளைக்கும் பாரிய துரோகமாகும்.  

இதேவேளை கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றும் விதமாகவும் ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் உரிமையை அழிக்கின்ற அரசியலமைப்பை மீண்டும் கோரும் முயற்சியில் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

அரசியல் யாப்பு ரீதியாக ஈழத் தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைக்க சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு தயாராகி வருகின்றமை பொதுவெளியில் மக்கள் அறியாத விடயம். தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத, வடக்கு கிழக்கு இணைப்பற்ற, தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காத அரசியல் யாப்பை கூட்டமைப்பே பரிந்துரை செய்வது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சுமந்திரனும் அவர் தலைமையிலான கூட்டமைப்பும் மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு துரோகங்களை இழைத்து, வரலாற்று தவறை செய்து வருகின்றது. கடந்த காலத்தில் இவர்கள் இழைத்த துரோகங்களால் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தனர். இப்போது ஈழத் தமிழ் இனத்தை இல்லாமல் ஆக்கும் முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபடுவது, தேர்தலில் மக்கள் வாக்களிக்காமைக்கான பழிவாங்கலா என்றும் கேள்வி எழுப்புகின்றோம்…” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – உரிமை மின்னிதழ்

Leave A Reply

Your email address will not be published.