ஒன்றரை வருடத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சம் பேர் கைது: அஜித் ரோஹன

0

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரும், போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறியமை தொடர்பில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புதன்கிழமை ஏற்பட்ட 3 வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 23 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 286 காயமடைந்துள்ளதோடு மொத்தமாக 430 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் போதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சத்து 3010 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்திலிருந்தே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 6,690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஹட்டனில் 4,992 பேரும் , குருணாகலில் 3,681 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய வீதிகளில் பஸ் ஒழுங்கை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருட காலத்தில் சரியான ஒழுங்கையில் பயணிக்காமை மற்றும் அநாவசியமாக முந்திச் செல்லல் உள்ளிட்ட ஒழுங்கை விதிகளை மீறிய மூன்று இலட்சத்து 95 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை, குருணாகல், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து தொடர்பான விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முடிந்தவரை விபத்துக்களை தவிர்ப்பதே இதன் பிரதான இலக்காகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.