மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!

0

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதான நகரமான யாங்கோன் மற்றும் பிற இடங்களில் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (சனிக்கிழமை) இவ்வாறு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் ஊடகவியலாளர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக்த தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவான பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.

அத்துடன், ஆங் சான் சூகி தடுத்து வைத்திருக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக இன்னும் உறுதியாக்த தெரியாத நிலையில், அவர் இந்தவாரம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக்த தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டி்ல மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடை உத்திகளையும் பயன்படுத்தியுள்ளன.

அத்துடன், மியன்மாரின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர், நாட்டில் இராணுவ ஆட்சியை நிறுத்துவதற்கு எந்தவொரு வழியையும் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.