உலக வங்கி திங்களன்று மியான்மரின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவம் அதிகாரத்தை கையகப்படுத்துவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வுகள் நாட்டின் மாற்றம் மற்றும் அதன் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி திங்கட்கிழமை பிற்பகுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்கள் ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்கள் உட்பட மியான்மரில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். மேலும் மியான்மருக்குள்ளும் வெளி உலகத்துடனும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் கலக்கமடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக மியான்மரின் ஜனநாயகத்திற்கான மாற்றத்தை ஆதரிப்பதில் ஒரு உறுதியான பங்காளியாக இருந்ததாகவும், பரந்த அடிப்படையிலான நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அதன் முயற்சிகள் மற்றும் சமூக சேர்க்கை அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியின் வலைத்தளம் 2020 ஆம் ஆண்டில் மியான்மருக்கு உலக வங்கி கடன் வழங்குவதில் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், 2017 இல் 616 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பட்டியலிட்டுள்ளது.
மியான்மரின் இராணுவம் திங்களன்று காலை இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, ஒரு ஆண்டு கால அவசரகால நிலைமையை விதித்தது.

தேர்தல் மோசடிக்கு பதிலளிக்கும் விதமாக இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை மேற்கத்திய தலைவர்களிடமிருந்து கண்டனத்தையும், அமெரிக்க அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தலையும் தூண்டியது, மேலும் ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கான கண்ணோட்டத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பியது.