சிறீதரனை விழித்தெழ வைத்த விக்னேஸ்வரன்!

0

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உள்ள காணிப்பகுதியை குத்தகைக்கு மாற்றும் அரசாங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் 1990 ஆம் காலப்பகுதியில்  பெர்மிற் அளிக்கப்பட்டபோதிலும் அந்தக் காணிகளுக்கு 33 வருட குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு குந்தகை ஒப்பந்தம் அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தெரியப்படுத்தப்பட்டபோதிலும் இது தொடர்பாக அவர் பெரிதாக அக்கறை காட்டியிருக்கவில்லை.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி உள்ளனர்.

இந்த விடயத்தில் உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கரைச்சிப் பிரதேச செயலர் மற்றும் வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோரிடம் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, காணி உரிமையாளர்களின் கையொப்பங்களுடன் மேன்முறையீட்டு ஆவணம் ஒன்று வடமாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளதை அறிந்துகொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று 14-02-2020 ஞாயிறு காலை 9.30 மணிக்கு அவசரமான இந்த விடயம் தொடர்பாக தனது தவிசாளர் வேழமாலிதன் ஊடாக அவசர கூட்டமொன்றை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

‘கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டுமென்பது’ அரசியலுக்கும் பொருந்தும். தனிக்காட்டு ராஜா என்ற தோரணையில் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டாமல் திரிந்த சிறீதரனுக்கு, கிளிநொச்சியில் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடானது, சிறீதரனையும் செயற்பாட்டு அரசியலை நோக்கித் தூண்டுகின்றது.

நன்றி: தமிழ்க்குரல்

Leave A Reply

Your email address will not be published.