ஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்?

0

அனைத்துலக தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கேள்வி

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான, இனப்படுகொலைக்கான நீதியை மறுத்துள்ள  சிறீலங்காவை காப்பாற்றும் உள்நோக்குடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும் ஏன் கொண்டாடி வருகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள அனை்ததுலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், இது ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களை நுண்மையாக புறக்கணிக்கும் தீர்மானங்கள்

“ஐ.நா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை நுண்மையாக புறக்கணித்தே வந்துள்ளன. தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிப்படைத் தோற்றத்தில் காட்டப்பட்டாலும் உண்மையில் தீர்மானத்தின் உள்ளடக்கங்களும் சரத்துக்களும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் சிறிலங்கா அரசுக்கு சாதகத்தை வழங்குவதாகவுமே அமைந்துள்ளன. அந்த வகையில், இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 19/2 – 22 March 2012, 22/1 – 21 March 2013, 25/1 – 27 March 2014, 30/1 – 1 October 2015, 34/1 – 23 March 2017, 40/1 – 21 March 2019 முதலிய தீர்மானங்கள் அனைத்துமே இலங்கையில் நடந்த குற்றங்கள் என்ற அடிப்படையில்தான் அணுகியுள்ளன. ஈழத்தில் நடந்தது இன அழிப்புப் போர் என்பதை அது ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் இதில் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அழிவுகள் குறித்து எந்தவொரு உள்ளடக்கங்களும் இடம்பெறவில்லை. இத்தகைய தீர்மானங்களை தமிழ் மக்களை கொண்டாடத் தூண்டும் வகையில் செயற்படுவதும் இனத்திற்கு இழைக்கும் பெருந்துரோகமாகும்.

இனப்படுகொலைக்கு புழகராம்

நடந்த இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை, சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு புழாரம் வழங்கிய கொடுமையையும் இங்கே நினைவுபடுத்துகின்றோம். 2012ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19:2 என்ற தீர்மானத்தில் பயங்கரவாதத்தை அழித்த சிறிலங்கா அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறப்பட்டமை மனித உரிமைப் பேரவையின் மாண்பையே அழித்தொழித்த வரலாaற்று நிகழ்வாகும்.மனித உரிமைகளை காக்க வேண்டிய அமைப்பு ஒன்றரை இலட்சம் பொதுமக்களை கொன்றமைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.நா மன்றத் தீர்மானங்கள், தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருவதுடன் தொடர்ந்தும் ஈழத்தில் இனப்படுகொலையை தொடர்வதற்கான ஆணையையும் வழிவகைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

அத்தகைய தீர்மானங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும் கொண்டாடி வருகின்ற நிலையில் ஐ.நா மன்ற தீர்மானத்தில் இடம்பெற்ற மூன்று துரோகங்களை  அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டுகின்றது.   

18 மாத கால அவகாசம் எனும் துரோகம் கால அவகாசம் எனும் துரோகம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராகின்றனரா? எனக் கேள்வி எழுப்பி தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சில மாதங்களின் முன்னர் எச்சரித்திருந்தது. அத்துடன் அதனால் ஏற்படப்போகின்ற விளைவுகளையும் எதிர்வு கூறியிருந்தது.இந்த நிலையில் தற்போது சிறிலங்கா அரசுக்கு 18 மாத கால அவகாசம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது எஞ்சிய தமிழ் மக்களையும் இனப்படுகொலை செய்வதற்கான கால அவகாசமாக காணப்படுகின்ற நிலையில், இத்தகைய தீர்மானத்தை கண்டு வெற்றித் தீர்மானமாக வெடி கொளுத்தி கொண்டாவது சரியானதொரு அணுகுமுறையா?

கடந்த காலத்தில் ரணில் – மைத்திரி தலைமையிலான சிறிலங்கா அரசுக்குகால அவகாசம் பெற்றுக் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோத்தபாய அரசுக்கும் கால அவகாசம் பெற்றுக் கொடுத்து துரோகம் இழைக்கப் போகின்றது என்ற அவதானிப்பு மையத்தின் எதிர்வுகூறல் இங்கே நிறைவேறியுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.உள்ளக விசாரணை எனும் ஏமாற்று ஐ.நா மன்றத்தின் 46 ஆவது கூட்டத் தொடர்பில் 46:1 எனும் தீர்மானமும் கடந்த காலங்களைப் போன்றே சிறிலங்கா அரசுக்கு உள்ளக விசாரணையை பரிந்துரைத்துள்ளமை மற்றொரு துரோகமாகும். கடந்த காலத்தில் சிறிலங்கா அரசு பல உள்ளக விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கைகளை கிடப்பில் போட்ட நிலையில், இனப்படுகொலை செய்வதனையே நீதியாக்கி, சட்டம் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறான விதத்தில் ஐ.நா மன்றம் நடந்து கொள்ளுகின்றது.

போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், நிலப் பிரச்சினைகள் போன்ற எந்தவொரு விடயத்திலும் நீதி என்பது மறுக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு முழுக்க முழுக்க சாதகமாக சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்புக்குள் இனப்படுகொலை விவகாரத்தை அமிழ்த்துவது எஞ்சிய ஈழத் தமிழ் இனத்தையும் அழித்தொழிக்கும் அணுகுமுறையாகும். இதனை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது சரிதானா?

புலிகளை இலக்கு வைத்த தீர்மானம்

ஈழத் தமிழ் மக்களை வகைதொகையற்று இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை ஆகும். இன்றும் தாயகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் சர்வதேச நீதிமன்றத்தில் 

சிறிலங்காவை நிறுத்துங்கள் என்று கோரி தெருக்களில் கண்ணீரோடும் கம்பலையோடும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து சிறிலங்கா அரசு தன்னை தானே விசாரித்துக் கொள்ளட்டும் எனக் கூறுகின்ற தீர்மானத்தை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்?

இதேவேளை இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 16 சரத்துக்களில் நான்காவது சரத்து தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. புலிகளை நாயைக் போல கொன்றேன் என சிறிலங்கா அரச அதிபர் கூறுகின்ற நிலையில், புலிகள்மீது விசாரணை கோரும் ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை தமிழ் தலைமைகளும் சில புலம்பெயர் அமைப்புக்களும்  கொண்டாடுவது ஐ.நா மனித உரிமைப் பேரவை இனவழிப்பால் நிந்திக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகத்தைக் காட்டிலும் பெருத்த துரோகம் என்பதை பெரும் கண்டனத்துடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை, ஐ.நா மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் ஈழத் தமிழ் மக்களின் அபிலாசை மற்றும் கோரிக்கை என்ன என்பது தொடர்பிலும் தீர்க்கமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து அதற்காக உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, ஐ.நா மன்றத்துக்கும் உலக நாடுகளுக்கும் அதை உணர்த்துகின்ற வகையில் எமது தலைமைகளும் போராட்ட அமைப்புக்களும் செயற்பட வேண்டும் என்பதை அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தி நிற்கின்றது… என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.