இந்திய கிரிக்கெட் வீரர் தவான் விவாகரத்து: மனைவி ஆயிஷா கூறுவது என்ன?

0

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக திகழும் 35 வயதான ஷிகர் தவான், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். 

இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளது.

ஷிகர் தவானுடன் விவாகரத்தாகியுள்ளதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

ஷிகர் தவான் இதனை உறுதிப்படுத்தாத நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவின் மூலம் ஆயிஷா தனது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்.

ஆயிஷா அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். 

ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அவரின் முதல் கணவரை பிரிந்து 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். 

இருவருக்கும் சோராவர் என்ற மகன் உள்ளார். மேலும் ‘ஆயிஷா தவான்’ என்ற தனிப்பட்ட சமூக ஊடக கணக்கையும் அவர் அழித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் நண்பர் வட்டத்தில் இருந்த ஆயிஷாவை, ஷிகர் தவான் பேஸ்புக்கில் முதல் முறையாக பார்த்தார். 

அவருடைய புகைப்படங்களை பார்த்து வயப்பட்டு பின்னர் அறிமுகமாகி அது திருமணம் வரை சென்றது. 

முதலில் தவானின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் தவான் அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்.

ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறி இருக்கின்றனர்.

தவானின் மனைவி ஆயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்,

“விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை. 

இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன்.

விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும்.

சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து. நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து.

விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. என உருக்கமான பதிவையிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.