சிவாஜியை விஞ்சிய சுமந்திரன்

0

நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்ற காசியானந்தனின் வரிகளை உண்மையாக நிரூபித்துள்ள ஸ்ரீலங்கா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே விண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் விடும் வகையில் அண்மையில் நடிப்புக்களை அரங்கேற்றப்பட்டுள்ளன.

தலைமைத்துவத்தின் மாண்பு

“தலைமைத்துவத்தின் மாண்பு என்பது இயல்பானதாக உண்மையானதாக அமைய வேண்டும். உலகில் தலை சிறந்த தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வரலாறு கடந்து வாழ்வதற்கு அவர்களின் நேர்மையான ஆளுமையான பண்பே அடிப்படையாக அமைகின்றது. நெல்லுடன் களையும் அரிசியுடன் கல்லும் கலந்திருப்பதைப் போல வரலாறு முழுவதும் ஆளுமை மிக்க தலைவர்களின் மத்தியில் சில போலித் தலைவர்களும் மக்களுக்கு சிரிப்பூட்டுவது வழக்கமான விடயமாகும்.

குறிப்பாக 2009ஆம் இற்குப் பின்னர் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சில உறுப்பினர்கள் தமிழ் சினிமாவின் அதி உச்ச நடிகர்களை விஞ்சும் வகையில் திரைப்படங்களையும் விளம்பரங்களையும் நடித்து வருகின்றமை, உலகத் தமிழ் சமூக வலைத்தளவாசிகளின் சிரிப்புக்கு தீனியிட்டுள்ளது.

ஒரே நாளில் விதைத்துப் பொங்கிய சுமந்திரன்

ஸ்ரீலங்கா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த வாரம் கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் ஒரே நாளில் ஊழுது, அதே நாளில் விதைத்து, அதே நாளில் அறுவடை செய்து, அதே நாளில் பொங்கிய அதிசய நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அத்துடன் உழுது விதைக்கப்பட்ட வயலை மறுபடியும் உழுது, விதைத்த வயலில் மறுபடியும் விதைத்து உடனேயே அறுவடையும் செய்து தன் விவசாய அறிவுப் புரட்சி செய்துள்ளார். இதுவரை நாளும் வெள்ளை வேட்டி மடிப்பு குலையாமலும் கோட் சூட்டுடனும் நடித்து வந்த சுமந்திரன் சாரம் எனப்படும் லுங்கியுடன் விவசாயி என்ற புதிய வேடத்தில் நடித்துள்ளார்.

அண்மைய காலத்தில் தமிழக சினிமாவில் விவசாயிகளாக நடிப்பதில் தமிழக சினிமா நடிகர்கள் பெரும் அக்கறை காட்டியுள்ள நிலையில் சுமந்திரன் அவர்களை விஞ்சிய விவசாயி வேடத்தில் ஒரு நாள் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளமை உலகத் தமிழ் சமூக வலைத்தள வாசிககளின் சிரிப்புக்கும் பொழுதுபோக்கிற்கும் தீனியிட்டுள்ளது.

சிறீதரன் உள்ளரங்கில் படப்பிடிப்பு

தனது அரசியல் கூட்டாளியும் அரசியல் ஆலோசகருமான சுமந்திரன் வெளியரங்கில் படப்பிடிப்பு மேற்கொண்டுள்ள நிலையில், அவரது சகா ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளக அரங்கொன்றில் படப்பிடிப்பு ஒன்றை நடாத்தி உள்ளார். 2ஆம் லெப் மாலதி நினைவுநாளில் உள்ளரங்கில் அஞ்சலி செலுத்துவதைப் போன்ற புகைப்படத்தை எடுத்து தனது அரசியலுக்காக வெளியட்டுள்ளார்.

2ஆம் லெப்டினன் மாலதி அவர்களுக்கும் ஒட்டுமொத்த மாவீரர்களுக்கும் மக்கள் பொதுவான நினைவேந்தல் செய்யும் உரிமையை வெல்ல முடியாமல், சிங்கள அரசுக்கு துணைபோன சிறீதரன், மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனாக தனது குணத்தை வடிவமைத்துள்ளார். தற்போது  இதுபோன்ற நடிப்புக்களை செய்து தமிழ் மக்களை ஏமாற்றி தொடர்ந்து பதவியில் அமரும் முயற்சிகளில் கச்சிதமாக ஈடுபடுகின்றார்.

சுமோ – சிறீ கூட்டுத் துரோகம்

ஸ்ரீலங்கா அரசு தமிழினப்படுகொலையில் இருந்து தப்பிக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கியமை, தமிழர் தாயகம்மீதான நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவு அளித்தமை, இனப்படுகொலை விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாமல் நீர்த்துப் போகும் செயல்களுக்கு ஆதரவு அளித்தமை போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துரோகச் செயல்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரனின் பங்களிப்பு அதிகமாகும்.

கடந்த தேர்தலில் சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் இயகத்தையும் கொச்சைப்படுத்தியது சுமந்திரன் – சிறீதரன் கூட்டணி. சுமந்திரனை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு மிகப் பெரும் துரோகத்தையும் கொச்சைப்படுத்தலையும் சிறீதரன் மேற்கொண்டமை வரலாறு ஒருபோதும் மன்னிக்காத மறக்காத துரோகமாகும்.

சிவாஜியை விஞ்சிய நடிர்கள்

தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவானாகவும் நடிகர் திலகமாகவும் கருதப்படுகின்ற சிவாஜி கணேசன் மித மிஞ்சிய நடிப்பாலும் ரசிகர் உலகத்தால் கவரப்பட்டவர். அத்தகைய சிவாஜி கணேசன் விண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் விடும் வகையில் சுமந்திரனும் சிறீதரனும் தமது நடிப்பு நாடகத்தை – திரைப்படத்தை அரங்கேற்றியுள்ளனர். “போராட்டம் விரைவில் வெடிக்கும்..” என்ற வசனத்தை அடிக்கடி பேசி வெடி குண்டு முருகேசனாக மாவை சேனாதிராஜா வலம் வந்த நிலையில் அவரை தற்போது சுமந்திரனும் சிறீதரனும் ஓவர் டேக் செய்துள்ளனர்.

நடிப்பு என்றால் இனி சுமந்திரனும் சிறீதரனும் தான் என்றும் சிவாஜி கணேசன் இவர்களிடம் நடிப்புக்கு பிச்சை வாங்க வேண்டும் என்றும் இனிவரும் காலத்தில் இரட்டை நடிகர் திலகங்களாக சுமந்திரனும் சிறீதரனும் இடம்பிடிப்பார்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் இனப்படுகொலை்ககான நீதியை பெறும் வழிமுறைகளையும் இல்லால் செய்து தமிழ் மக்களை திசை திருப்ப இத்தகைய நடிப்புக்களை இனி வரும் காலத்தில் தமிழ் மக்கள் இன்னமும் பார்க்க நேரிடும் என்பதையும் இந்த நகைச்சுவையான தருணத்தில் எச்சரிக்கையாகவும் இடுகிறோம்.

அத்துடன் தமிழ் மக்கள் தமது இனவிடுதலைக்காகவும் இனப்படுகொலை்ககான நீதிக்காகவும் உழைக்கும் தலைவர்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களையே தமிழ் மக்களின் புதிய தலைமுறை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துவதுடன் சுமந்திரன், சிறீதரன் போன்ற காமடி நடிகர்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்றி தமிழ் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் இத் தருணத்தில் மிகவும் முக்கிய பணியாக வலியுறுத்தி நிற்கின்றோம்

Leave A Reply

Your email address will not be published.