ஸ்ரீலங்காவை காப்பாற்றவே சுமந்திரன் குழு அமெரிக்கா பயணம்!

0

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றும் துரோகத்தை கச்சிதமாக முன்னெடுக்கவே சுமந்திரன் குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இனப்படுகொலைக்கு நீதியும் சுயாட்சியுமே தமிழர்களின் இறுதி இலக்கு என்பதில் தமிழ் மக்கள் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.

கள்ளப் பயணம்

“தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத் தரப் போவதாக காட்டிக் கொண்டு 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை குறைநிலையில் தமிழர்களின் தலையில் திணித்து தொடர்ந்து சிங்கள மயமாக்கல் மற்றும் இனவழிப்பை ஸ்ரீலங்கா அரசு முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு, துணைபோகும் வகையில் சுமந்திரனின் அமெரிக்க விஜயம் அமைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வெஞ்சினத்தையும் ஏற்படுத்துகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் என்ற பின் கதவால் நுழைந்த சுமந்திரன் தேர்தலில் போட்டியிட்டு வெல்லுகிறேன் என்று கூறி, பின்னர் புலி ஆதரவாளராக வேடமிட்ட எஸ். சிறீதரனின் துணையுடன் மீண்டும் பின் கதவால் வெற்றி பெற்ற நிலையில் தற்போதும் பின் கதவுச் செயற்பாடுகளின் மூலம் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றும் நோக்கில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவிற்கும் தனது பின்கதவு பாரம்பரியத்தின் அடிப்படையில் கள்ளப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும்.

சேடமிழுங்கும் 13

இலங்கை – இந்திய ஒப்பந்த்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பதுடன் அது சிங்கள தேசத்தின் தமிழர்மீதான இனவழிப்புக் கொள்கைக்கு கருவியாக அமையும் என்பதனால்தான் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் 13ஐ நிராகரித்துத் தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களும் பேராதரவு அளித்தனர். புலிகளின் அந்த நிலைப்பாடு தீர்க்கதரிசனமானது என்பதைப் போலவே 13 குறித்த ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாடும் அமைந்துள்ளது.

காணி, காவல்துறை அதிகாரங்களை பறித்தமை, மகாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் ஆளுநரை கொண்டு நகர்த்துதல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் இனவுரிமைப் போராட்டத்தைிற்கு 13 தீர்வல்ல என்பதுடன் அது தற்போது சேடமிழுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் புலப்படுத்துகின்றது. இதனை தமிழ் டீதசியக் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் சேடமிழுக்கும் 13ஐ பின்கதவால் பெற முனைந்து ஏமாறுவது எதற்காக? என்பதை அழுத்தமான கேள்வியாக அவதானிப்பு மையம் முன்வைக்கிறது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பை தீர்மானிப்பதற்காக அமெரிக்க சட்ட வல்லுனர்களுடன் சுமந்திரன் ஆலோசிக்கச் செல்வது என்பது ஸ்ரீலங்காவில் தமிழருக்கு எதிராக நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சியை இன்னும் கூர்மைப்படுத்தவே ஆகும்.

சுமந்திரனும் மூவரும்

சுமந்திரன் தலைமையிலான குறித்த மூவர் குழுவில் முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.வி. நாகநாதனின் மகள் நிர்மலா சந்திரகாசன், மற்றும் தமிழ் சட்டத்தரணி எஸ்.ஆர். கனகநாயகத்தின் மகனும் ஸ்ரீலங்கா அரசியல் பின்னரங்கில் நின்று செயற்பட்டவருமான கனக ஈஸ்வரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் போக்கற்று, ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய இந்த நபர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எவ்வாறு இருக்க முடியும்?

அத்துடன் கடந்த காலத்தில் சுமந்திரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் அதனை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக பேசி வந்ததுடன் ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பாகப் பேசியதுடன் இனப்படுகொலை புரிந்த இராணுவத்தை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு பல இளைஞர்களை புலிகள் எனக் கூறி சிறையில் தள்ளுவதற்கும் காரணமாக இருந்தார். இத்தகைய செயற்பாடுகளையும் நிலைப்பாட்டையும் கொண்டு சுமந்திரன் முன்னெடுக்கும் அமெரிக்கப் பயணம் நிச்சயமாக தமிழர்களை பெரும் ஆபத்தில் தள்ளும் என்பதையே கடந்த காலத்தை வைத்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்காவின் பிணையாளி

மைத்திரிபால சிறிசேன – ரணில் கூட்டரசாங்கத்தில் ‘இதயத்தால் இணைந்திருக்கிறோம்’ எனக்கூறி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி “தமிழர்களுக்காக வெட்டி விழுத்துகிறேன் பார்…” என்றால் போல் “சீன்” காட்டி சர்வதேசத்தில் அன்றைய சிங்கள அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்து அதன் வழியாக இனப்படுகொலையாளிகளான மகிந்தவையும் கோத்தபாயவையும் காப்பாற்றிய கூட்டமைப்பின் முன்னரங்க செயற்பாட்டாளராக சுமந்திரன் செயற்பட்டார்.

அதன் பின்னரும் இன்றைய அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கால அவகாசம் மற்றும் உள்ளகப் பொறிமுறை என்ற சலுகைகளைப் பெற்றுக் கொடுத்து ஸ்ரீலங்காவின் பிணையாளியாக செயற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்ததுடன் சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதலிய ஆபத்துக்களில் இருந்து ஸ்ரீலங்காவைப் பாதுகாக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு எந்தவிதமான மறுப்பும் கேள்வியும் இன்றி ஆதரவளித்துடன் அதனைப் பெரும் வெற்றியாகவும் கொண்டாடிய கூட்டமைப்பு எனும் ஸ்ரீலங்காவின் பிணையாளியின் தலைமைத் துரோகியாக சுமந்திரனே செயற்பட்டார்.

நீதியும் சுயாட்சியும்

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முதல் தமிழர்கள் சந்தித்து வரும் உரிமை மறுப்பும் இனவழிப்பும் முடிவுக்கு வர வேண்டுமாயின் சுயாட்சி கொண்ட ஈழ தேசத்தில் தமிழர்கள் வாழ்வதே தீர்வு என்பதை வரலாறு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பின்வாங்கலும் இன்றி இறுதிவரை  பெரும் தியாகங்களைச் செய்தது என்பதை மறவாதிருப்போம். ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி என்பது அடிப்படையில் தமிழர்களின் உரிமைக்கு எதிரானது என்பதுடன் இனவழிப்பை இலக்காகக் கொண்டது. “சுமந்திரன் புகுந்த இடம் உருப்படாது…” என்றால்போல் கடந்த கால புதிய அரசியலமைப்பு முயற்சி அனுபவத்தை மறந்துவிட முடியாது. 

எனவே தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை சர்வதே அரங்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் வாயிலாக நீதி நிலைநாட்டப்பட்டு தமிழர்களுக்கு சுயாட்சி கிடைப்பதுவே விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும் இனப்படுகொலைக்கான நீதியும் ஆகும். அதுவே நிரந்தர விடுதலையைத் தரும். எனவே சுமந்திரன் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசை பிணையெடுக்கும் முயற்சியையும் சேடமிழுக்கும் 13ஐ திணித்து சிங்களப் பேரினவாதத்தை விரிவுபடுத்தும் ஒற்றையாட்சியைப் பலப்படுத்த மேற்கொள்ளும் பிரயத்தனத்தையும் முறியடித்து மண்ணில் மாண்ட மாவீரர்களை மனதுருத்தி ஒன்றுபட்டு செயலாற்ற அனைவரும் அணி திரளவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.