பேரழகி | சமரபாகு சீனா உதயகுமார்

0

நீண்டதூரப் பேருந்தில் உன் பயணம்
இரசித்தபடி பயணிகள்

நீயோ
இருக்கையில் இருந்தபடி
யன்னலோரம் தலை சாய்த்துத் தூங்குகிறாய்

உன் அழகான சயனம் பார்த்த
மேகங்கள் எல்லாம்
உன்னைப் பார்க்க ஓடி வருகின்றன

மேகங்களின் அழகு என்பது
உன் கூந்தலைப் போலெனச் சொல்லி
தங்களுக்குள் பேசுகின்றன

மல்லிகைப் பூச்சூடி கோயில் வரும் உன்னை
ஒரு பூங்காவனமே
கோயிலுக்குள் நடமாடுவதாக எண்ணி
பரவசமடைகின்றனர் பக்தர்கள்

பக்தர்கள்
சுவாமியைத்
தரிசனம் செய்கிறபோது
சுவாமியோ உன்னைத்தான்
தரிசித்து மகிழ்கிறது

பத்திரிகையில் காதல் கவிதை ஒன்றினைப்
படித்துக்கொண்டிருக்கிறாய் நீ

ஒவ்வொரு எழுத்தும்
உன் நயனங்களின் அபிநயத்தை
நவர்ச்சி செய்து பெருமூச்சு விடுகின்றன

எழுத்துகளின் ஒவ்வொரு பெருமூச்சும்
அழகிய கவிதை ஒன்றினை விரித்துச் செல்கிறது

அவை
உன் நயனங்களின் அழகிய நடனத்தினைச்
சொல்லிச் சொல்லியே…

நீ அடுத்த பக்கம் புரட்ட நினைப்பதை
தடுத்து நிறுத்த படாத பாடுபட்டுக் கொண்டிருந்தன, அவை

எனக்காக அந்தச் சாலையோரமாகக்
காத்து நிற்கிறாய் நீ

பேரழகி உன்னைக்காண
ஓடோடி வருகிறேன் நான்

சாலையோர மரங்கள் எல்லாம்
நிழல் தந்து குடை பிடிக்கின்றன உனக்கு

உன்னருகாய் வந்த நான்
மரங்களின் மறைவிடம் பிடித்து
உன் தேன் ரச உதடுகளில்
முத்தம் பதிக்க முனைகிறேன்

மனம் பொறுக்காத மேகம்
கண்ணீர் மல்கி அழுது கொண்டிருந்தது

இன்று நல்ல மழை என்றுதான்
இதை ஊரிலும் பேசிக்கொள்கின்றனர்

-சமரபாகு சீனா உதயகுமார்

Leave A Reply

Your email address will not be published.