தோற்றுப்போன வார்த்தைகள் | துவாரகன்

0

அடித்துக்கொண்டோடும்
மழைவெள்ளத்தின் கலகலப்பாக
எத்தனை வார்த்தைகள்
உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.
அன்று மட்டும்
வார்த்தைகளின்றித் தோற்றுப்போனோம்.

எல்லோர் முகங்களும்
கவிழ்ந்திருந்தன.
எல்லோர் உதடுகளும்
சொற்களை இழந்திருந்தன.

முதலில்
எந்த வார்த்தையைப் பேசுவது?
உதட்டுக்குள் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.

உன் குண்டுக்கண்களும் சிரிப்பும்
முன்னே
அப்பியிருந்தன.
கண்களை நிறைத்தன
நீர்த்துளிகள்.
நெஞ்சத்தை அடைத்தது
ஓவென்ற அழுகை.

வாசலில் கேட்ட
சைக்கிள் சத்தம்
நீண்ட மௌனத்தை
உடைத்தது.
எல்லோரும் ஒரே கணத்தில்
திரும்பிப் பார்த்தோம்.

அப்போதும்கூட
வார்த்தைகள்
தோற்றுக் கொண்டேயிருந்தன.

துவாரகன்

(பவித்திரனுக்கு)
12122021

Leave A Reply

Your email address will not be published.