நிலவில் ஒழுகிய துமி | த. செல்வா

0

நீயும் நானும் நிலவை வரைந்து பழகிக் கழித்தவர்கள்
அதிலே குழைந்தவர்கள்

இதுபோலொரு நாளில்
நீ என் வானில் நீந்திக் கொண்டிருந்தாய்
நான் உந்தன் வண்ணந் துரத்தி அலைந்து கொண்டிருந்தேன்

அக்னி யுத்தமொன்றை எதிர்கொள்வது எவ்வாறென
என்னை நீயும் உன்னை நானும்
போர் செய்து கொண்டிருந்தோம்

எங்கள் காதல் வித்தையை
அதன் ஆழஞ்செறிந்த யுத்தத்தை
மௌனித்த இரசித்தது நந்திக் கடல் பட்சி

காற்றைப் புணர்ந்த நச்சின் எச்சில்
உந்தன் உச்சி முகர்ந்து
என்னை அச்சப் படுத்தி எந்தன் முத்தச் சத்தத்தை யுத்தச் சத்தத்தால் மூழ்கடித்தது

இப்போதெல்லாம் அந்த ந்திக்கடல்
அலைகளின் இடுக்குகளில்
பளபளக்கும் நீர்க்குமிழி முத்தங்களில்
நீ தெரிவாயோ எனத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதுகாதம் நீ இல்லையே

பிரமிளின் காற்றின் தீராப்பக்கங்களைப் போல்
நான் உன் நினைவை மீட்ட
கடல் பறவையின் சிறகைத் தேடுகிறது

தேடல் ஒரு தொடக்கம்
தேடல் ஒரு முடிவு
தேடல் ஒரு உழைப்பு
தேடல் ஒரு நினைவு
தேடல் ஒரு விடுதலை
தேடல் ஒரு அடைமழை
தேடல் ஒரு வாழ்வு

என எழுதி விழுகிறது என் நிலாத்தின் நிலா

இப்போதும் வானை விரித்தபடியே சிறகசைக்கிறேன்
துமியைச் சுமந்தவனாய்!

த.செல்வா
திருவையாறு
3.08

Leave A Reply

Your email address will not be published.