பாகிஸ்தான் படுகொலையை கண்டிக்க இனப்படுகொலை அரசுக்கு அருகதை இல்லை

0

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர்  கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை மிகவும் வன்மையாக கண்டிக்கது.  எனினும் அதனைக் கண்டிக்க தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு அருகதை இல்லை. இந்த நிகழ்வு ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ – இராஜதந்திர உறவுக்குக் கிடைத்த பரிசு.

மிருகத்தனமான படுகொலை

“பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக கடமையாற்றி வந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சகோதர இனத்தவரான 40 வயதான பிரியந்த குமார தியவடன வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வான சிங்கள மக்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் தாங்கொணத் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமது சமயத்தை நிந்தனை செய்ததாக கூறப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள பிரியந்த குமார தியவடனவின் படுகொலை செய்யப்படுகின்ற காட்சியானது இலங்கையில்  தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அழிப்பாளர்களால் கொன்று வீசப்பட்ட நிகழ்வுகளையும் நினைவுபடுத்துகின்றது. இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டு அதற்கான நீதிக்காகவும் அனைத்துலக மக்களின் மனித உரிமைகளுக்காகவும் போராடும் இனம் என்ற வகையில் தமிழ் சமூகம் இப் படுகொலையை கண்டித்து தமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.

ஸ்ரீலங்கா அரசுக்கு அருகதையில்லை

குறித்த படுகொலை தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் இது பாக்கிஸ்தானுக்கு நிகழ்ந்த அவமானம் என்றும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இலங்கையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதனால் இப்படுகொலை குறித்து ஸ்ரீலங்கா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ள போதும் இப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்ததன தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணை செய்ய பணித்துள்ள இம்ரான் கானின் செயற்பாடு பாராட்டத்தக்கது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளைக் கட்டவிழத்துவிடும் ஸ்ரீலங்கா அரசுக்கு இப்படுகொலை குறித்து கண்டனம் தெரிவிக்க அருகதை இல்லை. அதனாலேயே பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வமாக கண்டனத்தை தெரிவிக்க பின்னடிக்கின்றது. அத்துடன் மத ரீதியான மேலாதிக்கத்தை அரச கொள்கையாக பின்பற்றும் பாகிஸ்தானுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் அதற்காக படுகொலைகளை அரங்கேற்றுவதிலும்கூட இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று விஞ்சியவையுமாகும்.

புலிகளை அழிக்க உதவிய பாகிஸ்தான்

“பாகிஸ்தான் வழங்கிய பல்குழல் பீரங்கிகள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை பிடித்திருப்பார்கள், பல்குழல் பீரங்கிகளினாலேயே நாம் அதனை தடுத்து நிறுத்தினோம்…” என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே கடந்த ஆண்டில் கூறியமையை இங்கே நினைவுபடுத்துகின்றோம். அத்துடன் விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அதனை ஐ.நா பேசத் தவறிவிட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் கூறி, ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு அளித்தமையும் இங்கே கவனிக்க வேண்டியது.

ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போரில் பாகிஸ்தான் பெரும் பங்காற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இவ்வாறு மதவாத கொள்கைகளால் இணைந்து இலங்கையில் இனப்படுகொலைக்கு உதவி செய்த பாகிஸ்தான் – ஸ்ரீலங்கா நட்புறவின் பரிசாகவே தற்போது பெரும்பான்மைன சகோதரர் ஒருவரை பாகிஸ்தான் வன்முறையாளர்கள் அநியாயமாக பலியெடுத்துள்ளனர் என்பதை வேதனையுடன் கண்டிக்கிறோம்.

இனப்படுகொலைகளுக்கும் வகைகூறுங்கள்

பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு விசாரணைகைளை முன்னெடுத்து நீதியைத் தரும் என்ற வகையில் ஸ்ரீலங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாறு முழுவதும் பல்வேறு இனப்படுகொலைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்போதைய ஆட்சியாளர்களின் ஆட்சியில் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுமுள்ளனர்.

குறித்த இனப்படுகொலைகளுக்கு வகைகூறும் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையாகவும் ஸ்ரீலங்கா அரசு முன்வரவேண்டும் என்பதுடன் இனப்படுகொலைகளை செய்து மனித உரிமைகளை மீறுகின்ற எவரும் சட்டத்தில் இருந்து தப்பாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆபத்தான பௌத்த சிங்களப் பேரினவாதம்

பாகிஸ்தானில் நிலவும் மதவாத ஆதிக்க வெறிக்கும் ஸ்ரீலங்காவில் நிலவும் சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதுடன் இதுபோன்ற உலகின் ஆபத்தான ஆதிக்கப் போக்குகளை அகற்றி மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன் சிறுபன்மை மக்களின் வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஸ்ரீலங்கா அரசே பௌத்த சிங்களப் பேரினவாதத்தை முன்னெடுக்கும் விதமாக தமிழ் மக்களின் உரிமையை மறுப்பதுடன் தமிழ் இன அழிப்பையும் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றது. இதனால் எழுபது ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில் உலகின் எந்த மூலையிலும் இதுபோன்ற மிருகத்தனமான படுகொலைகளும் மனித உரிமைகளும் இடம்பெறுவதை கடுமையாக கண்டிப்பதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.