ரீலங்காவில் தூக்கு கயிறு வாங்கக்கூட மக்களிடம் பணம் இல்லை!

0

ஸ்ரீலங்காவில் பட்டினி தாங்க முடியாமல் உயிரை மாய்ப்பதற்கு தூக்குக் கயிறுகூட வாங்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். கோத்தபாய ராஜபக்ச யுத்த வீரனல்ல என்றும் ஆளத்தெரியாத கேலி நாயகன்.

உணவுக்குப் பஞ்சம்

ஸ்ரீலங்காவில் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடைகளில் இல்லை என்ற நிலைமையால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது. அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

பொருட்களின் கட்டுப்பாடற்ற விலையினால் உழைக்கும் பணத்தில் அருசியைக்கூட வாங்க முடியாத நிலை நிலவுகிறது. இன்னும் சில வாரங்களில் இலங்கையில் அருசி 300 ரூபாவிற்கு விற்கப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. உர இறக்குமதி நிறுத்தப்பட்ட நிலையில் நெல் உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் மக்கள் துடித்து விழுந்து மரணிக்கும் நிலை வரலாம்.

யார் ஆள்வது

நாமே ஆள்வோம், நாமே எல்லாவற்றையும் அடக்குவோம் என்று சூளுரைக்கும் கோத்தபாய ராஜபக்ச பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டு விலையை நீக்கியுள்ளார். இதனால் சந்தையில் கடுமையான விலை உயர்வுகள் நிலவுகின்றன. வியாபாரிகளும் முதலாளிகளும் விலையை தீர்மானித்தால் நாட்டை ஆளுவதற்கு என ஜனாதிபதி எதற்குத் தேவை? ஸ்ரீலங்கா சந்தைகள் ஆட்சி நிர்வாகத்திற்கு வெளியில் உள்ளமை இதனையே உணர்த்துகின்றது.

ஸ்ரீலங்கா அரச தலைவரின் வழி நடத்தலில் இயங்கும் விவசாய அமைச்சு படுதோல்வி அடைந்துள்ளமையும் ஸ்ரீலங்காவின் இன்றைய பெருநெருக்கடிக்கு காரணமாகும். மரக்கறிகளின் விலை தங்கத்தின் விலை போல உயர்ந்து வருகின்றது. உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்காமை, கால போகங்களை மதிப்பிட்டு உற்பதிகளை மேற்கொள்ளாமை, இடர்கால முகாமையின்மை போன்ற  விவசாய அமைச்சின் பிழையான செயற்பாடுகளினால் மரக்கறி சந்தையும் விலை தளம்பி மக்களின் உயிரை எடுக்கின்றது. அத்துடன் வறிய ஆபிரிக்க நாடுகள் போன்று மூட்டைக் கணக்கில் பணத்தை கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கும் நிலையே ஸ்ரீலங்காவில் ஏற்படப் போகின்றது.

வீழும் கோத்தபாய அரசு

ஸ்ரீலங்கா அரசின் சிரேஸ்ட அமைச்சரும் ராஜபக்ச குடும்பத்தினரின் விசுவாசியுமான சுசில் பிரேம் ஜெயந்த அண்மையில் பதவி விலகியிருந்தார். அரசை விமர்சித்தார் என்பதன் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்வின் அழுத்தத்தின் பெயரில் இவர் பதவி விலகியுள்ளார். அத்துடன் கோத்தபாய ராஜபக்ச அரசுக்குள் இருந்தே அவருக்கு எதிரான கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுவரை காலமும் கோத்தாவை வெற்றி நாயகனாக புகழ்ந்த சிங்களப் பேரினவலாத அரசியல்வாதிகள் இப்போது மிகுந்த கேலிப் பொருளாகக் கருதி அவரை தூக்கி எறிகின்றனர். கோத்தபாய ராஜபக்ச அரசின் வீழ்ச்சியின் அடையாளமாக இடம்பெறும் இந்த நிகழ்வுகள் ஸ்ரீலங்கா எந்தளவுக்கு மோசமான பொருளாதாரக் கட்டத்தை அடைந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்துகின்றது. பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஸ்ரீலங்காவை அதளபாதாளத்திற்குள் தள்ளிய பெருமையை கோத்தாய ராஜபக்ச பெற்றுள்ளார்.

யுத்த வெற்றி என்பது சாபம்

போர் வெற்றி வீரன் என்றும் புலிகளை நாயைப் போல இழுத்து வந்து நந்திக்கடலில் சுட்டேன் என்றும் கடந்த காலத்தில் பேசிய கோத்தபாய ராஜபக்ச இன்றைக்கு அரசியலில் நாயைப் போல இழுத்து எறியப்படுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு அதனையே தனது மாபெரும் சாதனையாக பேசி வந்த கோத்தபாய ராஜபக்ச இன்றைக்கு கேலியின் நாயகனாக உருமாறி வருகின்றமை காலத்தின் தீர்ப்பாகும்.

உணவை தடுத்து மருந்தை தடுத்து பசியில் தவித்த குழந்தைகள்மீது  கொத்துக் குண்டுகளை வீசி, அவர்கள் சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சைக் கலந்து இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் செய்திருந்தனர். ஈழத் தமிழ் இனத்தை அழித்த போரினை மாபெரும் வெற்றியாக சித்திரித்த கோத்தபாய ராஜபக்சவுக்கு அதுவொரு தீராத சாபம் என்பதை இப்போது காலம் உணர்த்துகின்றது. 

கோத்தாவின் இராணுவ விவசாயம்

விவசாயத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதாக கோத்தபாய கூறியிருப்பது வேடிக்கையும் அபாயமும் கொண்டாதாகும். ஏற்கனவே கல்வி, மருத்துவம், நிர்வாகம் என அனைத்திலும் இராணுவத்தை நிறைத்தமையினாலேயே ஸ்ரீலங்கா இன்று பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. கோத்தபாயவின் இராணுவ விவசாயம் ஸ்ரீலங்காவை இன்னும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி அனைத்து மக்களையும் சவக்கிடங்கில் தள்ளும் அபாயத்திற்கான அறிகுறியாகும்
தமிழ் நிலத்தை அன்றைக்கு உணவாலும் அத்தியாவசியப் பொருட்களாலும் தடுத்து உயிர் திருகிய அரசு இன்றைக்கு அதே நிலமையால் சிறிலங்காவின் கழுத்தை திருகுகின்றது.

ஈழத் தமிழ் இனம்மீது மேற்கொண்ட இனப்படுகொலை செயலுக்கு நீதியை நிலைநாட்டுவதுடன் சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழர் தேசத்தின் தற்சார்புப் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமென உலகத் தமிழர்களை வலியுறுத்துகிறோம் 

Leave A Reply

Your email address will not be published.