உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு காரணமாக, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனியர்களின் விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய அரசு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், உக்ரேனியர்கள் இன்று முதல் ஆஸ்திரேலியாவுக்குள் வரலாம் எனப்படுகிறது.
தற்காலிக விசாக்கள் மற்றும் பார்வையாளர் விசாக்கள் மூலம் உக்ரேனியர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜூன் 30 வரை காலாவதியாகும் உக்ரேனிய குடிமக்களின் ஆஸ்திரேலிய விசாக்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படும்” என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரேனியர்களின் விசா விண்ணப்பங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.