நீ வளர்கையில் ஆனந்த அழுகையில்
அனாதி ஆகிறேன்
வளர்கையில் முத்தங்களை யார்மிசை
வழங்குவேன்
கொஞ்சல்களின் கெஞ்சல்களை எங்கே கொட்டுவேன்
உந்தன் குழப்படிகளை இரசித்து எந்தன் கவலைகளை எப்படிக் கழுவுவேன்
நெஞ்சத் தோட்டத்தில் உன்சிரிப்புப் பூக்களைப் பறித்து
தினம் மாலை கோர்த்துப் பார்வைக்கு புதுச் சத்து ஊட்டுவேன்
இப்போதெல்லாம் நீ வளர்ந்துவிட்டாய்
தூரச் சென்றுகொண்டிருக்கிறாய்
உன் செல்லக் கதைகளைக் கேட்க முடிவதில்லை
இனிப்புப் பண்டங்களை ஊட்டிவிட முடிவதில்லை
வானத்தில் உன்னை வீசி
பேரின்ப ஆச்சரியத்துள்
மூழ்க முடியவில்லை
என் கால்களில் உனை அமர்த்தி
ஊஞ்சாலே உக்கிணியே…..
பாட முடிவதில்லை
கண்ணே
குழந்தாய்…….
நீ வளர்கையில் நான் உடைகிறேன்
சிதறும் நதிதானே கடலை வரையும்
உடையும் உணர்வுதானே உன்னதம் கௌவம்
என இப்போதெல்லாம்
உன்னை வளரவிட்டு நான் குழந்தையாகிறேன்
வாழ்வு ஒரு சூனியமான சுகமென
வாழ்வு ஒரு இருளான ஒளி என
வாழ்வு ஒரு வலியான வண்ணமென
வாழ்வு ஒரு இடியான மழையென
த.செல்வொ
8.27
கிளிநகர்