ஜனாதிபதி மாளிகை முன் தமிழர்கள் நீதிக்காக இப்படிப் போராடலாமா?

0

ஸ்ரீலங்காவில் தமிழர் தேசத்திற்கு ஒரு சட்டமும் சிங்கள தேசத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் பாரபட்சத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் இரு நாடுகள் தோன்றவும் தொடரவும் வேண்டியநிலை காணப்படுகிறது.

கொதித்தெழும் சிங்கள தேசம்

“இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா அரசு தமிழ் இனப்படுகொலைக்காக இராணுவச் செலவீனங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளமையை கடந்த நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த நிலையில் சிங்கள தேச மக்கள் பொருளாதார நெருக்கடி கண்டு கொதித்தெழுந்து போராடுவது நியாயமானது. எனினும் ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இனப்பாகுபாடு நடவடிக்கை காரணமாக இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் தமிழர் தேசம் அமைதி காத்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தாகோகம என்ற பெயரில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் மாளிகை முன்பாக இரவு பகலாக சிங்கள மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் குறிப்பாக பதவி விலக வேண்டும் என்ற அடிப்படையிலும் இப் போராட்டத்தில் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அத்துடன் சிங்கள தேசம் எங்கும் இதனை வலியுறுத்திய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் பௌத்த இனவாத பிக்குகள், சிங்கள கலைஞர்கள் எனப் பலரும் இதில் பங்கெடுக்கின்றனர்.

முள்ளிவாய்க்காலுடன் தொடங்கிய போராட்டம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போர் முடிந்த தருணத்தில் தமிழர் தாயகம் போராடத் துவங்கியது. இனவழிப்புப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டியும், ஸ்ரீலங்கா அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி தமிழரை் தாயகம் கடந்த பதின்மூன்று வருடங்களுக்கும் மேலாக போராடுகிறது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் விடுதலைக்காக அவர்களின் தாய், தந்தையர்கள் நடத்துகின்ற போராட்டம் மனசாட்சியுள்ள மக்களின் இதயங்களை மிகவும் துயரத்திற்கு தள்ளக்கூடிய போராட்டம். அத் தாய்மார்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகின்ற போதும் கண்ணீர் விட்டு நிலத்தில் புரண்டழுது செய்கின்ற போராட்டங்களை பதின்மூன்று ஆண்டுகளாக ஸ்ரீலங்கா வேடிக்கை பார்த்து வருகின்றது. அத்துடன் ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகள் தமிழர் தாயகம் வருகின்ற போது அம் மக்கள் சினம்கொண்டு நடத்தும் போராட்டத்திற்கும் எந்தப் பதிலும் இல்லை.

தாய்மார்களை மிரட்டும் துப்பாக்கிகள்

இந்த நிலையில் ஈழத் தாய்மார்கள் வெயிலிலும் மழையிலும் தெருக்களின் கரையில் இருந்து வீடுகளுக்குச் செல்லாமல் போராடிப் போராடியே தங்கள் உயிரை இழந்தும் மாய்ந்தும் வருகின்றனர். ஸ்ரீலங்கா அரசு அவர்களுக்கு பதிலையும் நீதியையும் வழங்காமல் இருப்பதுடன் அம் மக்களை துப்பாக்கிகளை கொண்டு மிரட்டி அச்சுறுத்துகின்றது. அத் தாய் தந்தையர்களின் வீடுகளுக்குச் சென்று துப்பாக்கிகளால் மிரட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உயிருக்கு விலை பேசப்படுகிறது.

ஆனால் ஜனாதிபதி மாளிகையின் முன்னார் உல்லாசமாக கொட்டகைகள் அமைத்து, உணவு சமைத்து, விளையாட்டுக்களில் ஈடுபட்டு, புத்தாண்டு கொண்டாடி, இசைநிகழ்வுகள் நடாத்தி போராடுகின்ற உரிமையை சிங்கள தேசத்திற்கு வழங்கியுள்ள ஸ்ரீலங்கா அரசு, தமிழர் தேசத்திற்கு துப்பாக்கிளையும் அச்சுறுத்தல்களையுமே பரிசாக வழங்கியுள்ளது. இதே ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் இனப்படுகொலை்ககான நீதிக்காவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் ஒரு போராட்டத்தை ஈழ அன்னையர்கள் முன்னெடுக்க அனுமதிக்கப்படுவார்களா? நிச்சயமாக இல்லை. சிங்கள இனவாதப் படைகளின் துப்பாக்கிகளுக்கே தமிழர்கள் பரிசளிக்கப்படுவார்கள்.

சிங்களத்தின் கபட தந்திரம்

காலிமுகத்திடலில் இத்தகைய போராட்டத்தை நடாத்த அனுமதித்தமையின் மூலமாக ஜனநயாகப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் அரசாக ஸ்ரீலங்கா தன்னை காட்ட முற்படுவது மறைமுக தந்திரமும் கபடமும் ஆகும். கடந்த காலத்தில் ஐ.நா ஆணையாளர் இலங்கை குறித்து பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள நிலையில், அதிலிருந்து தப்பிக் கொள்ளுவதற்காக சிங்கள மக்களின் போராட்டத்தை பயன்படுத்தும் ஸ்ரீலங்கா அரசு, ஜனாதிபதி மாளிகையின் முன்பாக தமிழர்கள் நீதிக்காக போராட முடியுமா? இனப்படுகொலை அரசு இதனை அங்கீகரிக்குமா?

கடந்த காலத்தில் தமிழர் தரப்பின் அறவழிப் போராட்டங்களை ஒடுக்கவும் நினைவேந்தலை தடுக்கவும் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டமும் கொரோனா தடுப்புச் சட்டமும் இன்றைய போராட்டத்தில் காணமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்புவதுடன் அதுவும் தமிழர்களுக்கு ஒரு மாதிரியும் சிங்களவர்களுக்கு ஒரு மாதிரியும் பிரயோகிகப்படுகிறதா என்பதையும் வினாவி நிற்கிறோம்.

பாரபட்சங்களினால் இரண்டுபட்ட தீவு

மிருசுவிலில் அப்பாவித் தமிழ் மக்கள் எட்டுப் பேரை படுகொலை செய்த சுனில் ரத்நாயக்காவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிட்டு, அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்துள்ள நாடு ஸ்ரீலங்கா. இதேபோன்ற அணுகுமுறையே மக்களின் ஜனநாயகப் போராட்டங்களிலும் ஸ்ரீலங்கா அரசால் பிரயோகிக்கப்படுகிறது. இது இன்று நேற்று தோன்றியதல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரத்தின் பின்னர் நிலவுகின்ற பாரபட்சங்களின் தொடர்ச்சி என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். மே மாதம், இனப்படுகொலை நினைவேந்தல் காலத்தில் வடக்கில் கண்ணீரும் தெற்கில் வெற்றிக் கொண்டாட்டமும் நடக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்படுகின்றமையும் இதன் தொடர்ச்சியாகும்.

இத்தகைய பாரபட்சங்களின் காரணமாகவே தமிழர் தேசம் பிரிந்து செல்லும் உரிமையை கோரி நிற்கின்றது. தவிரவும் இத்தகைய பாரபட்சங்களின் ஊடாக தமிழர்கள் இன்னொரு தேசத்தவர்கள் என்ற உணர்வையும் ஸ்ரீலங்க அரசு மக்களுக்கு ஏற்படுத்துகிறது. இந் நிலையிற்தான் ஸ்ரீலங்கா அரசிடம் ஜனநாயகப் போராட்ட  உரிமைகளை எதிர்பார்க்க முடியாத நிலையில்தான், கடந்த கால அனுபவங்களினால்தான், தமிழர் தேசம் சர்வதேச தலையீட்டையும் சர்வதேச பொறிமுறையையும் அதன் வழியாக நீதியையும் விடுதலையும் எதிர்பார்த்து நிற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.