இன்னும் பல கோத்தாக்களையும் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகளையும் சிங்கள தேசம் அறுவடை செய்யும்

0

ஈழத் தமிழ் மக்களை வகைதொகையற்ற ரீதியில் மனித குலத்திற்கு விரோதமான முறைகளில் இனப்படுகொலை செய்த இனப்படுகொலைக் குற்றவாளி இன்று பொருளாதாரக் குற்றவாளி ஆகுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்த உண்மைகளை இனியும் சிங்கள மக்கள் ணர மறுத்தால் பாரிய விளைவுகளுக்கு வரலாற்றில் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறோம்.

உச்சம்கொள்ளும் நெருக்கடி

“ஸ்ரீலங்காவின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்காவில் தூக்கு கயிறு வாங்கக்கூட மக்களிடம் பணம் இல்லாத நிலை ஏற்படும் என்பதை கடந்த காலத்தில் சுட்டிக்காட்டினோம். இதுவே இன்றைய ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலை என்று சிங்கள ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டுகின்றன. பொருட்களின் விலையேற்றத்துடன் தூக்குக் கயிறுகளுக்கும் விலையேற்றம் உச்சம் கொண்டிருப்பதாக சிங்களப் பத்திரிகைகள் கூறுகின்றன.

இந்த வாரத்தில், தீப்பெட்டி, சவற்காரம் போன்ற பொருட்களின் கடுமையான விலையேற்றம் செய்தமையின் வழியாக ஏழை எளிய மக்களிடம் இருந்து பாரிய அளவில் நிதியை ஸ்ரீலங்கா அரசு கொள்ளையடிக்கத் திட்டம் இட்டுள்ளது. பொருள் ஒன்று மூன்று மடங்காக விலைறே்றம் கண்டுள்ளது. கடந்த காலத்தில் நாற்பது ரூபா விற்கப்பட்ட பாண் தற்போது நூற்றி அறுபது ரூபா விற்பனை செய்யப்படுவதைப் போன்றே அனைத்துப் பொருட்களின் விலையேற்றமும் உள்ளன.

கழுத்தை நெறிக்கும் கடன்

ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு மாத்திரம் 4 பில்லியன் டொலர் மதிப்புடைய கடனை திருப்பி செலுத்த வேண்டும். இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டொலர் சர்வதேச தங்கப்பபத்திர கடன் உள்ளது. ஸ்ரீலங்கா அரசு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி செலவு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா தற்போது சுமார் 12 பில்லியன் டொலர் கடனை வாங்கிக் குவித்துள்ளமை பொருளாதார சீரழிவுக்கு அடிப்படையாகும்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டொலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும். சீனாவிற்கு மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் அளவுக்கு நேரடியாக டொலர்களாக பெற்றத் தொகையாகும்.

பொருளாதாரக் குற்றவாளிகள்

பொருளாதார நெருக்கடிகளை சமன் செய்வதற்காக கடன்கள் வாங்குவதாக கூறப்பட்ட போதும், ராஜபக்ச குடும்பத்தினர் அவற்றை கொள்ளையடித்ததே உண்மையானது என்றும் அதன் காரணமாகவே இன்று பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அரசுக்கு எதிராக போராடும் சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் கூறுகின்றனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கணிசமானவர்கள், ராஜபக்சவினர் பொருளாதாரக் குற்றவாளிகள் என்றும் அவர்கள்மீது சர்வதே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மிகக் கொடுமையான வழிமுறைகளில் மனித குலவத்திற்கு விரோதமான வகையில் இனப்படுகொலையை மேற்கொண்ட கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர், ஒருபோதும் கருணை கொண்ட ஆட்சியை சிங்கள மக்களுக்கு வழங்க மாட்டார்கள். இனப்படுகொலைக் குற்றவாளிகள் பொருளாதாரக் குற்றவாளிகாக மாறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இதைக் குறித்த சிங்கள மக்களின் பார்வைகளும் அணுகுமுறைகளும் எதிர்காலத்தில் கோத்தபாய ராஜபக்சக்களை இன்னும் இன்னும் பெருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்.

உங்களுக்கு வந்தால் இரத்தமா?

தமிழர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, சிங்களவர்களுக்கு வந்தால் இரத்தம்? என்ற வகையில் தான் சிங்கள மக்களின் அணுகுமுறை காணப்படுகின்றது. இலங்கைத் தீவில் எழுபத்து நான்கு வருடங்களாக இழந்த உரிமைக்காக ஈழத் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். முப்பது ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி சிங்கள அரசின் கொடுமைகளுக்கு எதிராக ஈழத் தமிழினம் போராடியது. எழுபது வருடங்களாக ஈழத் தமிழ் இனம் பாரிய இனவழிப்புக்களை சந்தித்து வருகின்றது. முள்ளிவாய்க்காலில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வழியாக நீதியை வழங்க வேண்டும் என்று இரவு பகலாக, வெயிலிலும் மழையிலும் ஈழத் தமிழ் இனம் தெருவில் கிடந்து போராடுகின்றது. இதனை கடந்த காலத்தில் சிங்கள அரசைப் போலவே சிங்கள தேச மக்களும் கண்டுகொள்ளாத நிலையில் இருந்தனர். சிங்கள அரசின் இனப்படுகொலைச் செயற்பாடுகளுக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆதரவு கொடுத்தமையினால்தான் இன்று சிங்கள தேசம் இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

இந்த நிலையில், தற்போதாவது, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொருளாதாரக் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச தண்டிக்க வேண்டும் என்றும் கோருவதே நீதியும் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வை தரும் அணுகுமுறையாக அமையும் என்பதுடன் மறுத்தால் எதிர்காலத்தில் இன்னும் பல கோத்தபாய ராஜபக்சக்களையும் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகளையும் சிங்கள தேசம் அறுவடை செய்யும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.