குரங்கு அம்மை நோய் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்த அனைத்து தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம் காணுமாறு பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவில்,
1000 க்கு மேற்பட்ட பாதிப்புகள், இந்நோய் பரவல் இதுவரை இனங்காணப்படாத 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் மேலும் பரவுவதைத் தடுக்கவும் அனைத்து தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம் காண பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
நோய் பரவுவதைத் தடுப்பது குறித்து மேலும் வலியுறுத்திய அவர், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால், குரங்கு அம்மை நோய் பரவல் இனங்காணப்படாத நாடுகளில் பரவுவது உண்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளைப் பற்றிப் பேசிய டெட்ரோஸ்,
குரங்கு அம்மை நோயிற்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை கையிருப்பில் குறைவாகவே உள்ளன.
பொது சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்க உலக சுகாதார ஸ்தாபனம் செயல்பட்டு வருவதாகவும், நோய் பரவியுள்ள 29 நாடுகளுக்கு தடுப்பூசி அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
பல தசாப்தங்களாக ஆப்பிரிக்காவில் வைரஸ் எவ்வாறு வாழ்ந்து வருகிறது மற்றும் கொன்றது என்பதையும் அவர் எடுத்துரைத்தார், ஆனால் அதிக வருமானம் கொண்ட நாடுகளை பாதிக்கத் தொடங்கியபோது உலகம் இப்போது கவனம் செலுத்தியுள்ளது என்றார்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் கடுமையானதாக இருக்கலாம்.
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் குறைந்தது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குளாகி 7 முதல் 14 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ஆனால் 5-21 நாட்கள் வரையும் இருக்கலாம்.
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளாக முகம், கை, பாதம், கண்கள், வாய் மற்றும் பிறப்புறுப்புக்களில் கொப்புளங்களுடனான சொறி, காய்ச்ச்சல், தலைவலி, தசைவலி, உடலில் சக்தி குறைதல், நிணநீர் முனையங்கள் வீங்குதல் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நோய் பத்தில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.