விரைவில் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்

0

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.

உலகளவில், 72 உயிரிழப்புகள் உட்பட 3,100 க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்தது. 

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

 “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. பிரதான ஊடகங்களில், அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துதல் போன்றவை பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்று அவர்கள் கூறினர். 

விஞ்ஞானிகள் தற்போதைய குரங்கு அம்மை என்ற பெயரை “பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்று விமர்சித்த பிறகு, “உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து செயல்பட்டு வருகிறது” என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். 

இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் தெரிகிறது.

தினத்தந்தி

Leave A Reply

Your email address will not be published.