இன்று சித்ரா பௌர்ணமி

வரலாறு

0

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.

சித்திரை நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால், இத்தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்ரா பௌர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனை பித்ருகாரகன் என்றும், சந்திரனை மாத்ருகாரகன் என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்

சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வத்திருக்கின்றார்கள். அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி வரலாறு : 

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது. தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.

இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என அழைக்கப்படுகிறார்.

இத்தகைய சிறப்புகளை உடைய சித்ரா பௌர்ணமி இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது

இதேவேளை இறைவனது திருநாம கீர்த்தனம் உள்ளிட்ட புண்ணியச் செயல்களால் பாவங்கள் நீங்க செய்த புண்ணியங்களும் இறைவனிடம் சேர்ந்துவிட ‘இருவினை’ என்னும் மாயையினை அந்த ஜீவன் எளிதில் கடந்து உடலை விட்டு உயிர் நீங்கும் கட்டத்தில் மோட்ச நிலையைப் பெற்றுவிடுகிறது.

இந்தப் பேரின்ப நிலையை அடையத்தான் பலவிதமான புண்ணியங்களை செய்யமாறு நமது பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானது அன்னதானம். வறுமை நோயால் பீடிக்கப்பட்டு பசித்தவர்களுக்கும் உடலால் உழைத்து உண்ண முடியாதவர்களுக்கும் ஆதரவற்றோர்க்கும் குறிப்பாக இறையடியார்களுக்கும் செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியச் செயலாகும்.

இதனால் ஏற்கெனவே நாம் செய்த பாவங்களும் தீரும். ‘அன்ன தானம்’ என்றால் நூற்றுக் கணக்கானவர்களுக்கோ ஆயிரமாயிரம் பேருக்கோ அன்னமிட வேண்டுமென்பது இல்லை.
உள்ளார்ந்த அன்போடு நமது வசதிக்கேற்ப ஒரு கைப்பிடி சோறோ- அரைக் குவளைக் கஞ்சியோ கொடுத்தாலும் அது உயர்ந்த தானமே! இதில் ஐயம் வேண்டாம் என்று சான்றோர் வலியுறுத்துகின்றனர்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பதைத்தான். ‘அன்ன தானம்’ என்பது தகுதியற்றவர்களுக்கு அதாவது மதுவருந்துபவர்கள் அங்கஹீனம் இல்லாதிருந்தும் உழைக்கப் பிடிக்காத சோம்பலுடையோர் சாப்பிட்ட தெம்பில் திருடப் போகிறவர்கள் இறைவனை தூற்றுவோருக்கு செய்கின்ற அன்னதானத்தினால் எந்தப் பயனும் இல்லை.

தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் அன்னம் வழங்குவது காலநடைகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!
புண்ணிய காரியங்களைச் செய்ய நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான் சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!

அன்னதானத்துக்கு ஏன் ‘சித்ரா பௌர்ணமி’ திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்…? காரணம் உள்ளது. அது ‘சித்திரகுப்தன்’ என்ற தேவனின் பிறந்த நாள். ‘படங்களைச் சேகரிப்பவன்’ என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.

Leave A Reply

Your email address will not be published.