பச்சை பட்டு அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

0

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். அந்த கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

EElamNews
EElamNews

 

மதுரை:
மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது.

 

கண்டாங்கிப் பட்டு
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 25-ந் தேதி பட்டாபிஷேகமும், 26-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
EElamNews
EElamNews

 

இதற்கிடையே, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (28-ந் தேதி) மாலை 6.15 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

 

தங்கக் குதிரை வாகனம்
அங்கு அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை, அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து ஆடிப்பாடி எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
EElamNews
EElamNews
அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில், இன்று காலை தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடிநின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பல இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை கண்டு பக்தர்கள் தரிசித்தன்ர். இதை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பதால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.