தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகளுக்கு இடையூறுகள் விளைவிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
பௌத்தர்களின் புனித நாளும் மே தினமும் ஒரே நாளில் வருவதால் மே தின நிகழ்வுகளை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு மாற்றுமாறு அரசிடம் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கமைய 7ஆம் திகதி மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவது என்று அரச தரப்பினர் கூறியுள்ளனர்.
எனினும், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கொண்டாட்டங்களை மே மாதம் முதலாம் திகதியே கொண்டாடுவது என்றும், அதன்போது வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகளுக்கு எந்தவித இடைஞ்சல்களும் ஏற்படாதவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறையிலும், கிழக்கு மாகாணத்தில் வெல்லாவெளி விளையாட்டு மைதானத்திலும் மே தினம் கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டமன்று வடக்கு, கிழக்கிலுள்ள வர்த்தகர்கள் அன்றைய தினம் மதியத்துடன் கடைகளை மூடி தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தினர் கோரியுள்ளனர்.