மியான்மரில் புதிய கலவரம் : தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்

0

மியான்மரின் வடக்கு பகுதியில், ராணுவம் மற்றும் கச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 4000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கச்சின் சுதந்திர அமைப்பு மற்றும் அரசு துருப்புகளுக்கு இடையே இருந்து வந்த நீண்ட கால மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி மற்றும் பீரங்கி படை தாக்குதல்களை ராணுவம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், சீன எல்லையின் அருகே மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் சிக்கி இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. அப்பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு உதவி நிறுவனங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளனர்.

“எங்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகமாக உள்ளது – கர்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு முக்கியம்” என மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் தலைவர் மார்க் கட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அங்கு மக்கள் பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றார் அவர்.

யார் இந்த கச்சின் கிளர்ச்சியாளர்கள்?

மேற்கு மியான்மரில் ரோஹிஞ்சா நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மியான்மரின் வடக்கு பகுதிகளில் இன சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

பௌத்த மதத்தினை பெரும்பான்மையாக கொண்ட நாட்டில், 1961ஆம் ஆண்டு முதல் கச்சின் இன மக்கள் தன்னாட்சிக்காக போராடி வருகின்றனர். கச்சின் இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தை கொண்டவர்கள் ஆவர்.

சர்வதேச நாடுகளின் பதில் என்ன?

மியான்மரில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறியதோடு, உதவி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்காமல் இருப்பதாக அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூசியை பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், கச்சினில் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள யன்கூனில் உள்ள அமெரிக்க தூதரகம், “பொதுமக்களை பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.