‘ஈழகேசரி’ நா.பொன்னையா நினைவு நாள்

0


ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துறை மற்றும் அச்சுத்துறையின் பிதாமகர்களுள் ஒருவரும், குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஸ்தாபகருமாகிய அமரர்-ஈழகேசரி நா.பொன்னையாவின் ஞாபகார்த்த விழா யாழ்.குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(06) யாழ். குரும்பசிட்டி கலைஞானி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் உபதலைவர் பா. செந்தூரன் தலைமையில் பா.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஈழகேசரி நா.பொன்னையா ஞாபகார்த்த உரை நிகழ்த்தினார்.

இதன் போது அமரர் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த வருடம் நாடகத்துறை சார்ந்து நா.விமலநாதன் விருதைப் பெற்றுக்கொண்டார். நயினை கி.கிருபானந்தா விருது அறிமுகவுரையை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் தி.வேல்நம்பியை நடுவராகக் கொண்டு “இன்றைய ஊடகங்கள் சமூக மேம்பாட்டிற்கு வரமா? சாபமா?” எனும் பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது.

இந்தப் பட்டிமண்டப நிகழ்வில் ‘வரமே’ என்ற அணியில் ச.லலீசன், இ.சர்வேஸ்வரா, ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ ஆகியோரும் ‘சாபமே’ என்ற அணியில் வே.சிவராசா, ந.ஐங்கரன், த.ஐங்கரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஊடகங்கள் “வரமே” என்ற அணியே இறுதியில் வெற்றியீட்டியது.

விழாவின் நிறைவாக அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவர்கள் வழங்கிய காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய பாரம்பரியக் கலைநிகழ்வுகள் “கிராமிய சங்கமம்” எனும் பெயரில் களைகட்டின.

ஈழகேசரி ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிக முக்கியமானது. 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

அடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே ஈழகேசரியின் நோக்கமாக அமைந்தது. இது, அதன் முதழ் இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்து தெளிவாகிறது.

…. அறியாமை வயப்பட்டு உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்பி அறிவுச்சுடர் கொழுத்துவதற்கும் ஏற்ற நல்விளக்குப் பத்திரிகையே ………….. நமது நாடு அடிமைக் குழியிலாழ்ந்து, அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளம் குன்றி, சாதிப்பேய்க்காட்பட்டு, சன்மார்க்க நெறியழிந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.
மேலும் தன்னலமற்ற தேசத் தொண்டு புரியும் அவாவும் இப் பத்திரிகை வெளிவரக் காரணமாக அமைந்ததாக இக் கட்டுரையில் கூறப்படுகிறது.

…… மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே” என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.
ஈழகேசரியின் தோற்றப் பின்னணி பற்றி ஆராய்ந்த கா. சிவத்தம்பி, அக் காலத்தின் சமூக அரசியற் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் அரசியல் மயப்படுத்தப்பட்ட காலத்திலேயே இப் பத்திரிகை தொடங்கப்பட்டதென எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் 1841 இல் தொடங்கிய யாழ்ப்பாணப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஏறத்தாழத் தொண்ணூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் ஈழகேசரியே முதலாவது மதச் சார்பற்ற செய்திப் பத்திரிகை என்பது அவர் கூற்று.

Leave A Reply

Your email address will not be published.