நடினை தன்யா நடித்துள்ள போர்க்களத்தில் ஒரு பூ என்ற படம் இசைப்பிரியாவின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாம். இதனை இசைப்பிரியாவின் குடும்பத்தினரும் ஈழத் தமிழர்களும் எதிர்த்துள்ளனர். இப் படத்தில் இசைப்பிரியாவின் உண்மைக் கதைக்கு மாறாக அவரை கொச்சைப்படுத்தும் விதமான புனைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பட இயக்குனர் ஈழத் தமிழர்கள் பலரிடம் பெருமளவான நீதியை வேண்டி இந்தப் படத்தை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இதனை வேறு பெயரில் வெளியிடும் முயற்சியில் பட இயக்குனர் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் இந்தத் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று இசைப்பிரியாவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என்று கூறி இந்தப் படத்தில் நடித்த தன்யா என்பவர் புது புரளியை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவை இணையம் வெளியிட்ட விடயங்களை இங்கே தருகிறோம்.
உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய நோக்கமான ‘உலகத் தமிழர் ஒன்றிணைப்பு’ என்பதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அன்மையில் சென்னை காவல்துறையிடம் நடிகை தன்யா என்பவர் தனக்கு வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழர்கள் கொலை மிரட்டல் அச்சுறுத்துவதாக எழுத்து மூலமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனுடைய உள்நோக்கம் என்னவென்று நாம் ஆராய்ந்த போது, இந்த புகாரில் உண்மைத் தன்மை இருப்பதற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை. அப்படியெனில் இவர் எதற்காக இந்த புகாரை காவல்துறையிடம் கொடுத்தார் என்பதை பார்க்கும்போது, நாம் சில முடிவுகளுக்கு வர முடிகிறது.
நடிகை தன்யா என்பவர் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதனால் எந்தவொரு ஊடகமும் பல ஆண்டுகளாக இவரை சீண்டவில்லை. இந்த வேளையில், ஊடக வெளிச்சம் கிடைக்கவேண்டி இப்படியொரு புகார் அளித்திருக்கலாம்.
2. நடிகை தன்யா நடித்த முதல் திரைப்படமே வெளியிடுவதில் சென்சார் சிக்கல் ஏற்பட்டு, நீதி மன்றம் சென்று இறுதியில் பல வெட்டுகளுக்கு பின்னர் அதை வேறொரு பெயரில் வெளியிட இயக்குநரும், தயாரிப்பாளரும் முடிவு செய்தனர். அந்த படம் வெளியிடப்படும் பொழுது மக்களிடம் இப்படத்திற்கான விளம்பரம் கிடைக்க கீழ்த்தரமான விளம்பர யுத்தியை வைத்து தேட முயன்றதன் வெளிப்பாடுதான் இப்படியொரு புகாரை காவல்துறையிடம் கொடுத்து அதை ஊடகங்களும் செலவில்லாமலே செய்தியாக்கி விளம்பரம் தேடியுள்ளனர்.
3. நடிகை தன்யா என்பவர் தமிழ் அல்லாத மாற்று மொழியை தாய் மொழியாக கொண்டிருப்பவர். இப்படிப்பட்டவர்களில் சிலர் தமிழர்கள் மேல் இயற்கையாக வைத்திருக்கும் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாக இதுபோன்ற புகாரை தமிழர்கள் மீது கொடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
மேற்படி கருத்துக்களை வைத்துப் பார்க்கும் பொழுது, உலகத் தமிழர் பேரவையின் முதன்மை நோக்கத்தை சீர் குழைக்கும் வகையில் நடந்து கொண்ட நடிகை தன்யா-வின் உண்மை தன்மையை நேர்மையோடு விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இன்று (21.05.2018) சென்னை பெருநகர காவல்துறையிடம் உலகத் தமிழர் பேரவை புகார் ஒன்றை அளித்துள்ளது. உலகத் தமிழர் பேரவை- யால் அளிக்கப்பட்ட புகாரின் நகல் கீழே தரப்பட்டுள்ளது:
நடிகை தன்யா என்பவர் ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழரல்லாத மாற்று மொழியை தாய் மொழியாக கொண்டிருப்பதால், தமிழர்கள் மேல் இயற்கையாக இருக்கும் காழ்புணர்ச்சியை கொண்டு, 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து, தான் தமிழில் நடித்த 18.05.2009 படத்திற்காக வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் தன்னை தொலைப்பேசியில் மிரட்டுவதாக காவல்துறையிடம் பொய்யான புகார் கொடுத்து, காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பி கீழ்தரமான சுய விளம்பரம் தேட நினைக்கிறார் என்றே தெரிகிறது.
இவரால் காவல்துறைக்கு அனுப்பப்பட்ட மனுவில், தனக்கு மட்டுமின்றி, அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும் மிரட்டல் வருவதாக சொல்லியுள்ளார்.
புகார் உண்மையானதா என்பதை தெரிந்து கொள்ள புகார் கொடுக்கப்பட்டவர் மற்றும் மிரட்டப்பட்டவர்களின் செயல்பேசிகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து விசாரனை செய்து, உண்மையை உலகிற்கு தெரியுமாறு செய்யப்பட வேண்டுமென்று உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறின்றி, குறுக்கு வழியில் தனது திரைப்படத்திற்கான விளம்பரமாக இந்த புகார் பொய்யானதாக இருக்கும்பட்சத்தில், புகார் கொடுத்தவர் மீது உரிய விசாரனை நடத்தி தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.