அழும் உரிமையை தாருங்கள்; முன்னாள் போராளி காக்கா கண்ணீர் மல்க கோரிக்கை

0

தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பாதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மாவீரர் அறவிழியின் தந்தையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களுள் ஒருவருமான முத்துக்குமார் மனோகர் (காக்கா அண்ணா) இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு விடயத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் இழப்பை சந்தித்த மக்கள் ஒரே உணர்வுடன் உள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடவுள்ளோம்.

எங்களுக்குரிய காலக் கடமையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்கினார்கள். ஆணைக்குழுவினூடாக சொல்லப்படும் கருத்துக்களை எந்தளவிற்கு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

ஆனால் நாங்கள் பூஸாவிற்குள் இருக்கும் போது எங்களுக்கான கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினோம். எங்களுக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொடுத்தோம். அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

அதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்ட போதும், முக்கியமாக அன்றைய காலகட்டத்தில் துயலும் இல்லங்களுக்கு கால்பதிக்க முடியாது. எனினும் நான் குறிப்பிட்டது எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை வேண்டும் என்று.

என்னுடைய மகள் மட்டும் அதில் புதைக்கப்படவில்லை. ஏதோ ஒரு விதத்தில் இன்று துயிலும் இல்லம் போகக்கூடியதாக உள்ளது. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமில்லை இன்றைய நிலைமைக்காகவும் சேர்த்து அழ வேண்டும்.

தற்பொழுதைய செயற்பாடு எமது உரிமையைத் தட்டிப்பறிக்கும் செயற்பாடாக உள்ளது. எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் என்றும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா – யாழ்ப்பாணம்

இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான ‘குத்துக்கரணங்கள்’ மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய ‘ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து’ என்ற தலைப்புகளில் எழுதியவர்.

1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை ‘உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்’ மற்றும் ‘சிறைப்படாத சிந்தனைகள்’ தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் ‘விழுதுகள்’ ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் – 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் ‘மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்’ என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர்.

இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். தற்போது ஆலயமொன்றில் தொண்டராக இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.